search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விருது பெறும் நெல்லை தம்பதி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விருது பெறும் நெல்லை தம்பதி

    கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருதை வழங்கினார் முதலமைச்சர்

    கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதிக்கு அதீத துணிவுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருதான ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

    டாக்டர் அப்துல்கலாம் விருது:- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் முனைவர் கே.சிவனுக்கு வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. விருதை கே.சிவன் பெற இயலாத சூழ்நிலையால் மற்றொரு நாளில் முதல்- அமைச்சரிடம் இருந்து நேரடையாக பெற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா

    துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது:- கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி. அவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதீத துணிவுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்டம் கடையத்தை சேர்ந்த செந்தாமரை-அவரது கணவர் சண்முகவேல் தம்பதிக்கு வழங்கப்பட்டது.

    இந்த தம்பதியினரை கடந்த 11-ந்தேதி இரவு வீட்டுக்குள் புகுந்து 2 முகமூடி கொள்ளையர்கள் அரிவாளால் தாக்க முயன்றனர். அப்போது இருவரும் துணிச்சலோடு கொள்ளையர்களை எதிர்கொண்டு அவர்களை சாதுர்யமாக திருப்பி தாக்கி விரட்டி அடித்தனர்.

    கணவன்-மனைவி இருவரது துணிச்சலான செயல் பொது மக்களிடையே சிறந்த வரவேற்பையையும், அநீதியை கண்டு போராடும் மனபான்மையை ஊக்குவிக்கும் வகையில், அமைந்துள்ளது. தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்கொண்ட தம்பதிக்கு அதீத துணிவுக்கான முதல்- அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தங்க பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.

    பின்னர் விருது வழங்கும் விழா முடிந்த பிறகு செந்தாமரை-சண்முகவேல் இருவரையும் சந்தித்த எடப்பாடி பழனிசாமி நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். கொள்ளையர்களை விரட்டிய போது தம்பதியினரின் மனநிலை எப்படி இருந்தது என்பதை கேட்டறிந்து அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.

    முதல்-அமைச்சர் நல் ஆளுமை விருது 4 பேருக்கு வழங்கப்பட்டது.

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு, சென்னை நகர் முழுவதும் குற்றங்களை ஒழிப்பதற்காக 2½ லட்சம் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவியதற்காக விருது வழங்கப்பட்டது. இவருக்கு ரூ.2 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியதற்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு விருது, ரூ.2 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முதலமைச்சரிடம் இருந்து விருது பெறும் அமைச்சர் வேலுமணி

    சென்னை மாநகராட்சி பகுதியில் மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சாந்தோமில் உணர்வு பூங்கா அமைத்ததற்காக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. வணிக வரித்துறையில் ஜி.எஸ்.டி.க்காக புதிய செயலியை உருவாக்கியதற்காக விருது கிடைத்தது.

    மாற்று திறனாளி நலனுக்கு மிக சிறந்த சேவை புரிந்ததற்காக வேப்பேரியில் உள்ள குறைபாடு உடைய குழந்தைகளுக்கான பள்ளிக்கு (ஆப்பர்சுனிட்டி அறிவுசார்) கிடைத்தது.

    இதே போல் கோவை அரசு மருத்துவமனை கல்லூரி இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியனுக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவிக்கும் விருது வழங்கப்பட்டது.

    மாற்று திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்க தேனாம்பேட்டை எவெரெஸ்ட் ஸ்டேபிலை சர்ஸ் நிறுவனத்துக்கும், சிறந்த சமூக பணியாளராக செயல்பட்ட திருவான்மீயூரை சேர்ந்த சந்திரா பிரகாசுக்கும் விருது வழங்கப்பட்டது.

    சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான விருதை அதன் தலைவர் இளங்கோவன் பெற்று கொண்டார். மகளிர் நலனுக்கு சிறப்பாக தொண்டாற்றிய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சூசைமரியானுக்கும் மற்றும் சேலம் போதிமரம் தொண்டு நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

    சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட சேலம் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சி தலைவர் விருது தர்மபுரிக்கு முதல் பரிசும் (ரூ.15 லட்சம்), வேதாரண்யத்துக்கு 2-வது பரிசும் (ரூ.10 லட்சம்), அறந்தாங்கிக்கு 3-வது பரிசும் (ரூ.5 லட்சம்) வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சியாக டி.கல்லுபட்டி முதல் பரிசை (ரூ.10 லட்சம்) பெற்றது. 2-வது பரிசு நன்னிலத்துக்கு (ரூ.5 லட்சம்), 3-வது பரிசு பவானி சாகருக்கு (ரூ.3 லட்சம்) வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமாருக்கு கிடைத்தது. இவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பணம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும் விருது கிடைத்தது. இவர் அதிகளவில் ரத்த தானம் செய்து ஆதரவற்றோருக்கு உணவும் அளித்து வருகிறார்.

    மதுரை மாவட்டத்தை சேர்ந்த கலைவாணி என்பவர் ஆதரவற்றோர், முதியோருக்கு மறுவாழ்வு பணியை மேற்கொண்டு வருவதற்காக விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைவரும் முதல்- அமைச்சருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    பின்னர் குழந்தைகளுக்கு எடப்பாடி பழனிசாமி இனிப்பு வழங்கினார். பின் காரில் ஏறி பார்வையாளர் பகுதி வழியாக வந்து வணக்கம் தெரிவித்து கிளம்பி சென்றார்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கடற்கரை ரோட்டில் இரு புறமும் ஏராளமான பொது மக்கள் திரண்டு நின்று சுதந்திர தின நிகழ்ச்சியை பார்த்தனர்.
    Next Story
    ×