search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளசேதங்களை ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
    X
    வெள்ளசேதங்களை ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    நீலகிரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்

    நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேத பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை ஒட்டி உள்ள கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடலூரில் வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 7-ந் தேதி கீழ்நாடு காணியை ஒட்டிய தமிழக- கேரள எல்லை மற்றும் கேரளா சாலையோரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதங்களை பார்வையிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து நேற்று கோவை வந்தார். பின்னர் மேட்டுப்பாளையம் சென்ற அவர் அங்கு பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், வெள்ள பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் இரவில் மேட்டுப் பாளையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தங்கினார்.

    இன்று நீலகிரி மாவட்டத்தில் வெள்ளசேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய ஓ.பன்னீர்செல்வம் காலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓ.கே.சின்ன ராஜ், சாந்திராமு ஆகியோர் சென்றனர்.

    பின்னர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது,

    நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை அறிவிப்பு வந்தவுடன் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் வருவாய் துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக அளவுக்கு அதிகமாக மழைபெய்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்த நடவடிக்கையின் காரணமாக உயர் பாதிப்புகள் எதுவும் இல்லாத ஒரு சூழ்நிலை மாவட்ட நிர்வாகம் எடுத்து இருக்கின்றது என்பதை நான் குறிப்பிட்டு கூற கடமைப்பட்டுள்ளேன்.

    அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு இருந்த கலெக்டர் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் அரசின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரோடு இணைந்து பணியாற்றிய அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் இங்கு பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று அதனுடைய பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு என்னென்ன தேவை, தற்காலிகமாக என்ன தேவை, நிரந்தரமாக என்ன தேவை இவைகளெல்லாம் கணக்கிடப்பட்டு அரசினுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்பதை கூறிக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் பார்த்து பின்னர் செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.

    ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து அரசை குறை கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும். நடைபெற்று கொண்டிருக்கின்ற பணிகள் துரிதமாக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    நிலைமையை கண்டறிந்து முழு விவரங்களையும் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கின்றன ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிகாரிகள் தரப்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியதால் பில்லூர் அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இரவு 7மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரம் 95 அடிஅணையின் 4 மதகுகளில் இருந்து இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி பில்லூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக குறைந்தது. அணையின் நீர் மட்டம் 95 அடியாக இருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரம் கன அடி தண்ணீர் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×