search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுமலை முகாமில் விநாயகர் கோவிலில் பூஜை செய்த வளர்ப்பு யானைகள் கிரி, கிருஷ்ணா.
    X
    முதுமலை முகாமில் விநாயகர் கோவிலில் பூஜை செய்த வளர்ப்பு யானைகள் கிரி, கிருஷ்ணா.

    முதுமலையில் விநாயகருக்கு மணியடித்து பூஜை செய்த யானைகள்

    உலக யானைகள் தினத்தையொட்டி முதுமலையில் விநாயகருக்கு மணியடித்து யானை பூஜை செய்தனர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஊட்டி:

    வனத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் யானையும் ஒன்றாகும். இந்த யானைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ந் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முதுமலை பப்பர்ஜோன் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார்.

    யானைகள் திருவிழா அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. பூஜையை தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளான கிரி மற்றும் கிருஷ்ணா ஆகியவை மணியடித்து கோவிலை சுற்றி வந்து பூஜையை தொடங்கி வைத்தன.

    பின்னர் வனஊழியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு ரசித்து பார்த்தனர்.

    விழாவையொட்டி யானைகளுக்கு வழக்கமான உணவுடன் சிறப்பு உணவுகளாக பழங்கள், பொங்கல் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. சுற்றுலா வந்த குழந்தைகள் யானைகளுக்கு கரும்பு வழங்கினர். இதில் வனச்சரகர்கள் தயானந்தன், ராஜேந்திரன், சிவகுமார், காந்தன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் உள்ள கோழிக்கமுத்தி முகாமில் ஆண் மற்றும் பெண் யானைகள் என 26 யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    உலக யானைகள் தினத்தையொட்டி யானைகளை முகாம் அருகே உள்ள ஆற்றில் நீராட வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில் முன் யானைகளை தனித்தனியாக நிறுத்தி மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து யானைகள் முன் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    சிறப்பு வழிபாடு நடத்திய போது முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் ஒரே நேரத்தில் துதிக்கை தூக்கி பிளறியபடி வழிபாடு செய்தது பிரமிக்க வைத்தது. தொடர்ந்து டாப்சிலிப் பகுதியில் மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர்கள் நவீன்குமார், காசிலிங்கம், வனகாப்பாளர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து யானைகளுக்கு பழங்கள், பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×