search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிவிபத்து (மாதிரி படம்)
    X
    வெடிவிபத்து (மாதிரி படம்)

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- தொழிலாளி உயிரிழப்பு

    விருதுநர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் சேதம் அடைந்தன. தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று சில ஆலைகளும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் கீழ் சில ஆலைகளும் இயங்கி வருகின்றன.

    விருதுநகர் கார்சேரி ஊராட்சிக்குட்பட்ட முத்துலாபுரத்தில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அனுமதியின் கீழ் செயல்படும் இந்த ஆலையில் 50 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது சிவகாசியை சேர்ந்த கமல் ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தினமும் காலை 9 மணிக்கு பணிக்கு வருவார்கள். பட்டாசு மருந்து கலவை பணி செய்பவர்கள் மட்டும் காலை 6 மணிக்கே வேலைக்கு வந்து விடுவார்கள்.

    அதன்படி இன்று காலை சிவகாசி அருகே உள்ள மத்தியசேனையைச் சேர்ந்த மாயழகு (வயது45) என்பவர் உள்பட 5 பேர் வந்தனர். அவர்கள் மருந்து கலவை அறைக்கு சென்று பணியை தொடங்கினர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த மேலும் 4 அறைகளும் சேதம் அடைந்தன.

    வெடி விபத்து காரணமாக பட்டாசு ஆலை புகை மண்டலமாக காணப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சிவகாசி, விருதுநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது ஒருவர் உடல் சிதறி கிடப்பது தெரியவந்தது. அவர் தொழிலாளி மாயழகு என கருதப்படுகிறது. மற்ற 4 பேரும் தப்பிவிட்ட நிலையில் மாயழகு மட்டும் விபத்தில் சிக்கி பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×