search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    வித்தியாசமான நிபந்தனையுடன் வீடுகள் கட்ட தடையில்லா சான்றிதழ்- ஐகோர்ட்டில் வனத்துறை தாக்கல்

    வனப்பகுதியில் வீடுகள் கட்டுவது தொடர்பாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட தடையில்லா சான்றிதழில் வித்தியாசமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
    சென்னை:

    வெள்ளியங்கிரி மலை வாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் லோகநாதன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஆலந்துறை களிமங்கலம் பகுதியில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் கிராமத்தில் 2500 வீடுகளும், பச்சன வயல் கிராமத்தில் 70 வீடுகளும் என மொத்தம் 4,710 வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.

    ஏற்கனவே வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானங்களை அதிகளவில் கட்டிவருவதால் யானைகள் அடிக்கடி எங்களது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விளைபயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்து வருகிறது. சிறுத்தைகளும் அவ்வப்போது இங்கு வந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி செல்கிறது.

    பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டிவிட்டால் அதை வைத்தே வனப்பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கவும், ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எளிதாக பட்டா உள்ளிட்ட அங்கீகாரம் வழங்குவதற்காக இதுபோன்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதற்கு பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்துக்கு தமிழக வனத்துறை வழங்கியுள்ள தடையில்லா சான்றிதழ் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த தடையில்லா சான்றிதழில் வித்தியாசமான நிபந்தனைகளை வனத்துறை கூறியிருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    ஆலந்துறை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் சுமார் 29 ஆயிரம் சதுர மீட்டருக்கு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. இந்த பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்த பகுதிகளில் வீடு கட்டினால், மனிதர்கள்- விலங்குகள் மோதல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே கீழ்கண்ட நிபந்தனைகளுடன், தடையில்லா சான்று வழங்கப்படுகிறது.

    இந்த பகுதிகளில் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். குடியிருப்புகளுக்குள் யானை வருவதை தடுக்க, அந்த குடியிருப்பை சுற்றி அகழிகளை வெட்ட வேண்டும். வன விலங்குகளின் நடமாட்டத்தை தெரிந்துக் கொள்ள கேமரா உள்ளிட்ட முன் எச்சரிக்கை உபகரணங்களை இப்பகுதிகளில் பொருத்த வேண்டும்.

    குடியிருப்புகளை சுற்றி மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வந்தால், அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். பொதுமக்கள் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. வனவிலங்கு நடமாட்டத்தை தடுக்கும் விதமான தடைகளை ஏற்படுத்தக்கூடாது. இயற்கையான நீரோடைகளை தடுக்கக்கூடாது.

    யானை உள்ளிட்ட வன விலங்குகளினால் கட்டிடங்கள் சேதம் அடைந்தாலோ, மனித உயிர்கள் பலியானாலோ அதற்கு வனத்துறை பொறுப்பு ஏற்காது. பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையினரிடம் இழப்பீடு எதுவும் கேட்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    பொதுவாக ஒரு திட்டத்தினால், எந்த பாதிப்பும் இல்லை என்றால் மட்டுமே தடையில்லா சான்றுகள் வழங்கப்படும். ஆனால், பாதிப்பு இருக்கும், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்ற வித்தியாசமான நிபந்தனைகளுடன், தமிழக வனத்துறையினர் தடையில்லா சான்று அளித்திருப்பது, ஐகோர்ட்டு வக்கீல்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×