search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோட்டையூர் வழியாக மேட்டூர் அணைக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வரும் காட்சி.
    X
    கோட்டையூர் வழியாக மேட்டூர் அணைக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வரும் காட்சி.

    100 அடியை எட்டுகிறது மேட்டூர் அணை - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை கொட்டியது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    2 அணைகளில் இருந்தும் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் இன்று காலை 2 லட்சம் கன அடி தண்ணீர் வருகிறது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி பாறைகளே தெரியாத அளவுக்கு புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஒகேனக்கலில் வீடுகளை தொட்டபடி தண்ணீர் செல்வதால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஊட்டமலை, இந்திராநகர், நாடார் கொட்டாய் பகுதிகளில் வசித்தவர்கள் மேடான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    அஞ்செட்டி சாலையை தொட்டபடி காவிரி வெள்ளம் செல்வதால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களை அனுமதிக்கவில்லை. காவிரி ஆற்றில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    மேட்டூர் அணை

    மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்தோடி செல்கிறது. தொங்கு பாலத்தை தொட்டபடி வெள்ளம் செல்வதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்றிரவு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை மேலும் அதிகரித்து 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    பிற்பகல் 2 லட்சம் கன அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 9-ந்தேதி 54 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 73.60 அடியாக உயர்ந்தது. இன்று பிற்பகல் 85 அடியை எட்டியது. கடந்த 4 நாட்களில் மட்டும் 32 அடி உயர்ந்தது.

    அணை நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இன்று இரவு அல்லது நாளை காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதனால் மேட்டூர் அணை நாளை (செவ்வாய்க்கிழமை) பாசனத்துக்காக திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் சென்று அணையை திறக்கிறார்.

    மேட்டூர் அணை கட்டி 85 ஆண்டுகள் ஆகிறது. 1961-ம் ஆண்டு ஜூலை 8-ந் தேதி அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இதுவே அதிகபட்ச நீர்வரத்தாக உள்ளது. 2005-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி வினாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. கடந்தாண்டு வினாடிக்கு 1.97 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இந்தாண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள கரையோர மக்களை கலக்கமடைய செய்துள்ளது. அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் நீர்தேக்க பகுதியில் உள்ள செட்டிப்பட்டி, ஏமனூர், கோட்டையூர், ஒட்டனூர், பண்ணவாடி, நாகமரை பரிசல் துறைகளில் படகுகள் இயக்க இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    நீர்மட்டம் 85 அடியை தாண்டியதால் பண்ணவாடி பரிசல் துறையில் வெளியே தெரிந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயமும், அதன் முகப்பில் உள்ள நந்தி சிலையும் மீண்டும் தண்ணீரில் மூழ்கின.

    மேட்டூர் அணை நாளை திறக்கப்படுவதால் காவிரி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சேலம், கர்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேட்டூர் அணையைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    Next Story
    ×