search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி சோலாடி சோதனை சாவடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு
    X
    ஊட்டி சோலாடி சோதனை சாவடி அருகே ஏற்பட்ட நிலச்சரிவு

    ஊட்டி, கோவையில் பலத்த மழை: மண்சரிவு-வீடுகள் இடிந்தது

    ஊட்டி, கோவையில் பலத்த மழையால் மரங்கள் சரிந்து விழுதல், மண் சரிவு, சாலை துண்டிப்பு, வெள்ளம் ஏற்பட்டு வருகின்றன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னுர் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு குன்னூர்- மஞ்சூர் சாலையில் கோடேரி பகுதியில் 4 மரங்கள் விழுந்தன.

    குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் குமார், கிருஷ்ணன் குட்டி, சுப்ரமணி, முரளிதரன், கண்ணன் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அங்கு சென்று கொட்டும் மழையில் மரங்களை வெட்டி அகற்றினர். 3 மணி நேரத்திற்கு பிறகு மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டது.

    நேற்று அதிகாலை 3.30 மணியளவில், இதே சாலையில் குன்னக்கொம்பை அருகே யூகலிப்டஸ் மற்றும் சீகை மரங்கள் விழுந்தன. இவை அகற்றப்பட்டு அதிகாலை 5 மணியளவில் போக்குவரத்து தொடங்கியது.

    ஊட்டி - குன்னூர் சாலையில் எல்லநள்ளி அருகே நேற்று மாலையில் மின் கம்பத்தில் சாய்ந்து விழுந்த யூகலிப்டஸ் மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர். பலத்த மழையால் மரங்கள் சரிந்து விழுதல், மண் சரிவு, சாலை துண்டிப்பு, வெள்ளம் ஏற்பட்டு வருகின்றன.

    தொடர் மழை காரணமாக ஊட்டி காந்தல் குருசடி காலனி, கஸ்தூரிபாய் காலனி, ஆர்.சி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் 15 வீடுகள் இடிந்து சேதமடைந்து உள்ளன. இந்த வீடுகளை ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ், தாசில்தார் ரவி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    ஊட்டிகுருத்துக்குளி சாலை தீட்டுக்கல் சந்திப்பில் இருந்து பசவக்கல் வரை விவசாய நிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் சாலையில் படிந்து உள்ளது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதன் காரணமாக அரசு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. குருத்துக்குளி கிராமத்துக்கு நஞ்சநாடு வழியாக மக்கள் சென்று வருகின்றனர்.

    ஊட்டி அருகே பார்சன்ஸ்வேலி அணைக்கு செல்லும் சாலையில் மின்சார வயர்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஊட்டியின் ஒரு பகுதி, மேல்கவ்வட்டி, குருத்துக்குளி, பார்சன்ஸ்வேலி கிராமம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லை. அங்குள்ள மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அனுமாபுரம் பகுதி, தங்காடுமுக்கிமலை சாலை, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    அங்கு குடியிருப்புகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டு காந்தல் முக்கோணத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    கஸ்தூரிபாய் காலனியில் குடியிருப்புகளையொட்டி உள்ள தடுப்புச்சுவர் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த முகாமில் குழந்தைகள் உள்பட 200 பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பால், உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்படுகிறது. மருத்துவ வசதியும் செய்யப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., சேவபாரதி அமைப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பந்தலூர் பகுதியில் உள்ள தற்காலிக முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ, இளைஞர்கள் களம் இறங்கினர்.பந்தலூர், சேரங்கோடு, பொன்னானி உள்ளிட்ட தற்காலிக முகாம்களில் மழையால் வீடு இழந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து உணவு உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறார்கள்.

    குன்னூரில் பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அந்த சாலை மற்றும் தடுப்பு சுவர் இடிந்து சுமார் 100 அடிக்கு மேல் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.

    அந்த பகுதியில் உள்ள வீட்டின் மீது மண் மூடியது. அங்கு யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வச்சினம் பாளையத்தில் பெய்த மழை காரணமாக மாரியம்மன் கோவில் அருகே உள்ள புனிதா, விஜயா, லட்சுமி ஆகியோரது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    அங்கு குடியிருந்தவர்கள் இரவோடு இரவாக அருகே உள்ள கோவிலுக்கு சென்று தங்கினர். மறுநாள் பார்த்தபோது 3 வீடுகளும் இடிந்து சேதம் அடைந்து விட்டது. சேதம் அடைந்த வீடுகளை ஆர்.டி.ஓ. சுரேஷ், தாசில்தார் சாந்தாமணி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    பொள்ளாச்சி அருகே கீழ்நாகர் ஊற்றுவில் மலை வாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் குஞ்சப்பன் என்பவரது இரண்டரை வயது குழந்தை சுந்தரி அடித்து செல்லப்பட்டாள்.

    அக்குழந்தையை தேடும் பணி இன்று 2-வது நாளாக ஆழியாறு ஊத்துக்கால்வாயில் நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லின் மூலம் கால்வாயில் மணல்களை அகற்றும் பணி நடக்கிறது.

    தொடர்மழையால் வால்பாறை-பொள்ளாச்சி இடையே மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலை மற்றும் ஒண்டிப்புதூர் பட்டணம் சாலையில் நொய்யல் ஆற்று தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பல கிலோ மீட்டர் சுற்றி பொதுமக்கள் மாற்று பாதையில் சென்று வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு பாலங்களை தாண்டி செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.


    Next Story
    ×