search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

    தொடரும் கன மழையால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

    கூடலூர், ஆக. 10-

    தொடரும் கன மழையால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

    தமிழகத்திலும், கேரளாவிலும் தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழையாக கொட்டி வருகிறது. கேரள மாநிலம் இடுக்கியில் பெய்து வரும் கன மழையால் அந்த மாவட்டம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் அணையின் நீர் மட்டம் 126.60 அடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர் மட்டம் 12 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு 8,818 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு போக வைகை அணையில் நிரப்பப்படுகிறது. பெரியாறு அணையில் நீர் இருப்பு 3,964 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் தற்போது 34.19 அடியாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் முழு கொள்ளளவை அடையும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அணைக்கு வினாடிக்கு 1,361 கன அடி தண்ணீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 562 மில்லியன் கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு நீர் மட்டம் 35.10 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 77.57 அடி. வரத்து 14 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 43.2, தேக்கடி 96, கூடலூர் 8, சண்முகாநதி அணை 5, உத்தமபாளையம் 2, வீரபாண்டி 12, வைகை அணை 1, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, கொடைக்கானல் 6.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. *** உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 21, 2015-ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதிகளில் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. அதன் பிறகு பருவமழை பொய்த்ததால் 2016 மற்றும் 2017-ம் ஆண்டு பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியை கூட எட்ட வில்லை.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட்டு 15-ந் தேதி பெய்த தொடர் மழை காரணமாக பெரியாறு அணைக்கு வினாடிக்கு 25,733 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அன்றைய தினம் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. அதன் பிறகு பருவ மழை குறிப்பிட்ட அளவு பெய்யாததால் இந்த ஆண்டும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

    தற்போது பெய்து வரும் மழையினால் அணையின் நீர் மட்டம் 126 அடி வரை உயர்ந்துள்ளது. இதே அளவு தண்ணீர் வரத்து வந்தால் சில நாட்களில் 142 அடியை எட்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×