search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கோவையில் பலத்த மழை - நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    கோவையில் பலத்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் மணிக்கு 4,650 கன அடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    கோவை:

    கோவையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சாலைகள் தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    அவினாசி மேம்பாலத்துக்கு அடிப்பகுதி, வடகோவை மேம்பாலத்தின் அடிப்பகுதி ஆகியவற்றில் மழை நீர் தேங்கி உள்ளதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாலத்துக்கு அடியில் தேங்கி உள்ள மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் ராட்ச மோட்டார் மூலம் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நேற்று இரவு வடகோவை மேம்பாலத்துக்கு அடியில் ஒருவர் காருடன் சென்றார். அப்போது அவர் மழை நீருக்குள் சிக்கி கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் பிரிவில் உள்ள கட்டிடத்தில் மழை நீர் ஒழுகி வருகிறது. இதனால் நோயாளிகளின் படுக்கைகள் ஈரமானதோடு, அங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. கட்டிடத்தில் இருந்து மழைநீர் தரையில் விழாமல் இருக்க வாட்டர் பாட்டில், வாளி உள்ளிட்டவைகளை வைத்து பிடித்து வெளியே ஊற்றினர். இதனால் இரவு முழுவதும் நோயாளிகள் பெறும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் மணிக்கு 4,650 கன அடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு மாவட்ட கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சிங்காநல்லூர்- வெள்ளலூர் ரோட்டில் உள்ள தரை பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல ஒண்டிப்புதூர்-பட்டணம் ரோட்டில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே அந்த வழியாகவும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சுங்கம் அருகே உள்ள சண்முகா நகரில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரம் விழுந்தபோது அந்த பகுதியில் உள்ள 2 மின் கம்பங்களும் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    பூமார்க்கெட் நன்னெறி கழகம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி சரோஜினி (வயது 85). இவர் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். மழை காரணமாக நேற்று இவரது வீடு சரிந்தது. வீட்டுக்குள் சரோஜினி சிக்கி கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூதாட்டியை வீட்டில் இருந்து மீட்டனர்.

    மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (65), இவரது உறவினர் திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (65). இவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்தபோது இன்று காலை 5 மணியளவில் மண் வீடு திடீரென சரிந்து விழுந்தது. வீட்டுக்குள் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் சேர்ந்து நுரையுடன் கூடி கருமை நிறமாக மாறி உள்ளது.

    சாலையில் வருபவர்கள் மீது நுரை கலந்த சாக்கடை கழிவுநீர் மேலே விழுவதால் வாகனங்கள் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுள்ளது. உடலில் பட்டவுடன் அரிப்பு ஏற்படுவதாகவும் , துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

    தரைப்பாலம் நீரில் மூழ்கி கழிவு நீர் வெள்ளை நிறத்தில் பனி படர்ந்தது போல உள்ளதால் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் உள்ளது.

    எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×