search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    X
    வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஒரே நாளில் 9 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை

    நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 4 ஆயிரத்து 318 கனஅடி நீர் வரத்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை திடீரென 17 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

    இதனால் நேற்று காலை 114 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 123 அடியாக அதிகரித்து ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து 14,321 கன அடி வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3262 மில்லியன் கன அடியாக உள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை அணையின் நீர் மட்டம் 31.92 அடியாக உள்ளது. அணைக்கு 411 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 481 மில்லியன் கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 35.10 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 76.58 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதலாவது பிரிவு செயல்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் மொத்தம் உள்ள 3 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 42 மெகாவாட் வீதம் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தொடர் மழை காரணமாக சுருளி, கும்பக்கரை அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    தொடர் மழையினால் கும்பக்கரை அருவி மற்றும் போடி கொட்டக்குடி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிள்ளையார் அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியிலும் மழை பெய்து வருகிறது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது.

    பெரியாறு 200, தேக்கடி 235, கூடலூர் 53, சண்முகா நதி அணை 53, உத்தமபாளையம் 57.1, வீரபாண்டி 61, வைகை அணை 27, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 17.1, கொடைக்கானல் 16.4 மி.மீ மழை அளவு பதிவானது.
    Next Story
    ×