search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு 20 முறை வெடிகுண்டு மிரட்டல்- கார் டிரைவர் கைது

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு 20 முறை வெடிகுண்டு மிரட்டல் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது உடனடியாக வெடிக்கும் என்றும் கூறினார்.

    அவர் அரை மணிநேரத்தில் மேலும் 19 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்டு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பை அதிகரித்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்கள். அப்போது தாம்பரம் சேலையூர் பராசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த டிரைவர் வினோத் குமார் (வயது 33) தனது செல்போனில் இருந்து பேசியது தெரியவந்தது.

    உடனே போலீசார் வினோத்குமாரை பிடித்து விசாரித்தனர். குடிபோதையில் இருந்த அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு 20 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    வினோத்குமார் கடந்த மாதம் 28-ந்தேதி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கோபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். கடந்த 5-ந்தேதி தான் ஜெயிலில் இருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு 2 நாட்களில் மீண்டும் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
    Next Story
    ×