search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தை மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி பார்வையிட்ட காட்சி
    X
    வெள்ளத்தை மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி பார்வையிட்ட காட்சி

    4வது நாளாக வெள்ளம் - பவானி ஆற்றில் 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

    பில்லூர் அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் இயற்கை எழில் சூழலில் பில்லூர் அணை அமைந்துள்ளது.

    நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் மட்டம்100 அடியாகும். கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 100 அடியாக இருந்தாலும் 97 அடி வரை தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதனால் அணைக்கு வந்த நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    நேற்று காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை அணைக்கு நீர் வரத்து சற்று குறைந்து 12 ஆயிரம் கன அடி வந்தது. இந்த தண்ணீரும் அப்படியே திறந்து விடப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் அணைக்கு நீர்வரத்து 38 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் அணையின் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.

    இன்று காலை 6 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்து 17 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இருபுற கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    இதனை தொடர்ந்து கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் ராஜாமணி கேட்டு கொண்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி பவானி ஆற்றங்கரையோரம் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். வீடுகளை வெள்ளம் சூழ்ந்தால் பொதுமக்களை தங்க வைக்க திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினரும் பவானி ஆற்றின் கரையோரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கிராம மக்களுக்கு தண்டோரா மூலமும், நகர் புற பகுதியில் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    Next Story
    ×