search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்யா எம்எல்ஏவுக்கு எதிராக அதிமுக தலைமை கழகத்தில் மீண்டும் முற்றுகை போராட்டம்

    தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏவான சத்யாவுக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தலைமை கழகத்தில் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள சத்யா தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். 2 மாதத்திற்கு முன்பு தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் 400 பேர் ஒரே நேரத்தில் கூண்டோடு நீக்கப்பட்டனர்.

    200 பேருக்கு பல்வேறு பொறுப்புகள் மாற்றி வழங்கப்பட்டன. மற்றவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதனால் சத்யாவிற்கு எதிராக நீக்கப்பட்ட பொறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

    பகுதி செயலாளர் பாபு, சின்னையா ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் அ.தி.மு.க. தலைமை கழகத்தை முற்றுகையிட்டனர். அப்போது 2 பேர் தீக்குளிக்கவும் முயன்றனர்.

    நீக்கப்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந்தேதி தலைமை கழகத்தை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட எதிர்கோஷ்டியினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த தகவல் உளவுத்துறை மூலம் முதல்-அமைச்சருக்கு தெரிய வந்தவுடன் அவர் வேலூர் தேர்தல் முடிந்தவுடன் பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறி அப்போது நடைபெற இருந்த போராட்டத்தை தள்ளி வைத்தார்.

    இந்த நிலையில் மாவட்ட செயலாளர் சத்யாவின் எதிர்கோஷ்டியினர் இன்று மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் அ.தி.மு.க. தலைமை கழகம் நோக்கி புறப்பட்டனர். ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் ஊர்வலமாக சென்ற அவர்களை போலீசார் தடுத்து மறித்தார்கள்.

    இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி கட்சி அலுவலகத்திற்குள் தொண்டர்கள் புகுந்தனர். வளாகத்தில் அமர்ந்து மாவட்ட செயலாளரை எதிர்த்து கோ‌ஷமிட்டனர்.

    பின்னர் தலைமை கழக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். சத்யாவிற்கு எதிராக போராட்டம் வலுத்து வருவதால் அ.தி.மு.க. தலைமை அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்க போகிறது என்பதை தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    போராட்டம் குறித்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    நீக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரே நாளில் 400 பேரை கட்சியில் இருந்து ஜெயலலிதா கூட நீக்கியது கிடையாது. பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்க வேண்டும். பதவி வழங்கும் வரை ஜெயலலிதா சமாதியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். மாவட்ட செயலாளர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×