search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கர்
    X
    சஸ்பெண்டு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பாஸ்கர்

    இரட்டைக்கொலையை சரியாக விசாரிக்காததால் சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் கொலையாளிகளுக்கு உடந்தை?

    கரூரில் நடைபெற்ற இரட்டைக்கொலையை சரியாக விசாரிக்காததால் சஸ்பெண்டான இன்ஸ்பெக்டர் கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்ததால் அவரிடமும் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை (வயது 70), சமூக ஆர்வலர். இவரது மகன் நல்லதம்பி (45), விவசாயி.

    குளித்தலை முதலைப்பட்டி குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இருவரும் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்ததால், ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் 2 பேரையும் வெட்டிக் கொன்றனர். இந்த கொலை தொடர்பாக முதலைப்பட்டியை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தியும், முதலைப்பட்டி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் வருகிற 14-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரிகள் மற்றும் குளித்தலை டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து முதலைப்பட்டி குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளனர்.

    இதனிடையே தந்தை- மகன் கொலை வழக்கில் முறையாக விசாரணை நடத்தாததாலும், கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் எழுந்த புகாரையடுத்து குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரை, திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

    முதலைப்பட்டி குளத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார், வீரமலை -நல்லதம்பிக்கு எதிராக செயல்பட்டவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்ததால் அவரிடமும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால் அவர் குளித்தலையை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கொலை சம்பவத்திற்கு முதல் நாளான கடந்த 28-ந்தேதி முதலைப்பட்டியில் சிலர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளதும், அதில் பங்கேற்ற சிலர், பாஸ்கரின் செல்போனை தொடர்பு கொண்டு பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    எனவே அவரிடம் பேசிய நபர்கள் யார்? என்ன பேசினார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

    Next Story
    ×