search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்
    X
    உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்

    நாகர்கோவில் அருகே படுகொலை - விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் உடலை வாங்க மறுத்து போராட்டம்

    நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    என்.ஜி.ஓ. காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை மாவிளை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்தார்.

    நேற்று மதியம் இவர் பறக்கையில் இருந்து என்.ஜி.ஓ. காலனிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சி.டி.எம்.புரம் பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. அந்த கும்பல் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பாகரன் அவர்களிடம் இருந்து தப்பிக்க மோட்டார்சைக்கிளை கீழே போட்டு விட்டு ஓடினார். ஆனால் அவரை விடாமல் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் துரத்தினர். அங்குள்ள முட்டுத்தெருவுக்குள் ஓடிய புஷ்பாகரனால் வேறு எங்கும் தப்பிக்க முடியவில்லை. இதை சாதகமாக்கிக் கொண்ட அந்த கும்பல், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே புஷ்பாகரன் துடிதுடித்து இறந்தார்.

    படுகொலை செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்


    புஷ்பாகரன் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் சி.டி.எம்.புரத்திலும், அவர் வசித்த பறக்கை மாவிளை பகுதியிலும் பதட்டம் நிலவியது. பறக்கையில் புஷ்பாகரனின் உறவினர்கள் திரண்டு திடீரென நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தாசில்தார் அனில்குமாரும், போலீசாரும் சமரசப்படுத்தினர். அதை ஏற்று உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசாரும், பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    புஷ்பாகரனை கொன்றவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக புஷ்பாகரன் கொல்லப்பட்டது தெரியவந்தது.

    புஷ்பாகரன் கொலையில் பறக்கையைச் சேர்ந்த கிஷோர் (19), பிரசன்னா (23), குளத்தூரைச் சேர்ந்த சஞ்சய், மாதேஷ், கோட்டாரைச் சேர்ந்த அஜோ (21) ஆகிய 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பிரசன்னாவும், கிஷோரும் சகோதரர்கள் ஆவர்.

    மோட்டார்சைக்கிளில் வந்து புஷ்பாகரனை கொன்ற அவர்கள் பின்னர் காரில் தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பது பற்றி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே கொல்லப்பட்ட புஷ்பாகரனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடந்தது. இதனால் அங்கு புஷ்பாகரனின் உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் மற்றும் நிர்வாகிகளும் திரண்டு நின்றனர்.

    அவர்கள் திடீரென பிணவறை முன்பு அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புஷ்பாகரனை கொன்ற கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும், புஷ்பாகரன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், இல்லாவிட்டால் புஷ்பாகரன் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறினர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதனால் ஆசாரிப்பள்ளத் தில் பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதேபோல பதட்டம் காரணமாக பறக்கை பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×