search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    முதலைப்பட்டி குளத்தில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    குளித்தலை அருகே தந்தை மற்றும் மகன் கொலைக்கு காரணமான முதலைப்பட்டி குளத்தில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (வயது 70), சமூக ஆர்வலர். இவரது மகன் நல்லதம்பி (45), விவசாயி. குளித்தலை முதலைப்பட்டி குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தது தொடர்பாக தந்தை-மகன் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் கடந்த 29-ந்தேதி தந்தை-மகன் இருவரையும் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள், சண்முகம், பிரபாகரன், கவியரசன், சசிகுமார், ஸ்டாலின், பிரவீன்குமார் ஆகியோர் மதுரை, திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியான ஜெயகாந்தனை மதுரையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளின் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    தந்தை-மகன் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தியும், முதலைப்பட்டி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் வருகிற 14-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கரூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் குளித்தலை டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் மற்றும் குளித்தலை கோட்டாட்சியர் லியா கத், தாசில்தார் செந்தில், குளித்தலை டி.எஸ்.பி. சுகுமாறன் ஆகியோர் முதலைப்பட்டி குளத்தில் ஆய்வு செய்தனர்.

    குளத்தின் மொத்த அளவு, எவ்வளவு நிலப்பரப்பு ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பு இடங்களுக்கு எதன் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குளத்தை ஆக்கிரமிப்பு செய்து யார் யார் விவசாயம் செய்து வந்தனர், எத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர். அதில் வீரமலை-நல்லதம்பிக்கு எதிராக செயல்பட்டவர்கள் யார்? என்று குளித்தலை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் குளத்தை ஆய்வு செய்து, தந்தை-மகன் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வீரமலையின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை முதலைப்பட்டி குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 39 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணி தொடங்கியது. இதையடுத்து 5 பொக்லைன் எந் திரங்கள் மூலம் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முகமது இஸ்திரிஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
    Next Story
    ×