search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் ஆம்னி சொகுசு பேருந்து தீ பிடித்து எரியும் காட்சி.
    X
    தனியார் ஆம்னி சொகுசு பேருந்து தீ பிடித்து எரியும் காட்சி.

    திருச்சி அருகே இன்று காலை ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆம்னி பஸ் இன்று காலை தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 42 பேர் உயிர் தப்பினர்.
    திருச்சி:

    சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று இரவு தனியார் ஆம்னி சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு வேகமாக வந்து கொண்டிருந்தது. முழுவதும் ஏசி வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட அந்த ஆம்னி பஸ்சில் 42 பயணிகள் பயணம் செய்தனர்.

    2 டிரைவர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் பஸ்சை ஒட்டி வந்தனர். இன்று அதிகாலை திருச்சியை அடுத்த கொணலை என்ற இடத்தில் வந்தபோது திடீரென பஸ்சின் மேற்பகுதியில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் பஸ்சுக்குள்ளும் பரவியது. அதிகாலை தூக்கத்தில் இருந்த பயணிகள் கருகிய வாடை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பலத்த காற்று காரணமாக தீயின் வேகம் அதிகரித்தது. அடுத்த விநாடி பஸ் ரோட்டோரமாக நிறுத்தப்பட்டது. தீ... தீ.... என்று கத்திக் கொண்டே பயணிகள் அனைவரும் பஸ்சின் முன்புறமாக கதவை திறந்து கொண்டு இறங்கி தப்பி ஓடினர். சில பயணிகள் பஸ்சின் பின்புற பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதித்தனர்.

    பஸ் டிரைவர்களும் பயணிகள் தப்பிக்க உதவினர். அதற்குள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டிகளும் விரைந்தன. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பஸ் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.

    ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் பஸ்சின் உட்புற பகுதி முழுவதும் தீயில் எரிந்து விட்டது. ஏசி கூண்டும் முழுவதுமாக எரிந்து விட்டது.

    இந்த விபத்தில் பஸ் கண்ணாடி உடைத்து குதித்த போது 2 பயணிகளுக்கு கண்ணாடிகள் குத்தி காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்தேசம் ஏற்படவில்லை. இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏசிக்காக பஸ்சின் மேற்புற பகுதியில் வைக்கப்பட்டுள்ள கூண்டு பகுதியில் மின்சார வயரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேறு காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சை ஒட்டி வந்த கீரனூரைச் சேர்ந்த டிரைவர் செல்வத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    அடிக்கடி ஆம்னி பஸ்கள் தீப்பிடிப்பதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×