search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெருவில் சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை மூலம் பிடித்தனர்.
    X
    தெருவில் சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை மூலம் பிடித்தனர்.

    சென்னையில் தெருவில் நடமாடும் 58 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பு ஊசி

    சென்னையில் தெருவில் நடமாடும் 58 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பு ஊசி போடும் திட்டத்தை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தை பின்பற்றி அவற்றை பிடித்து கருத்தடை செய்யப்படுகின்றன.

    இதனால் தெரு வீதிகளில் அலைந்து திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்று கருத்தடை செய்து அதன் வீரியத்தை கட்டுப்படுத்துகின்றனர்.

    தெரு நாய்களால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை உருவாவதை தடுக்க வெறிநாய் தடுப்பூசி திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்துகிறது.

    சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தெரு நாய்கள் கடிப்பதால் “ரேபிஸ்” எனும் ‘வெறி நாய்கடி பாதிப்பு’ ஏற்பட்டு சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பெரும்பாலும் பல்வேறு நோய் கிருமிகளால் தாக்கப்பட்டு உள்ளன.

    அது போன்ற நாய்கள் கடித்தால் சிறுவர்கள் மட்டு மல்ல பெரியவர்களும் உயிர் இழக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் வெறி நாய் கடியில் இருந்து பொது மக்களை பாதுகாக்க வெறி நாய் தடுப்பூசி சிறப்பு திட்டம் மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    சென்னை மாநகராட்சியில் எவ்வளவு தெருநாய்கள் உள்ளன என கடந்த ஆண்டு இறுதியில் கணக்கெடுக்கப்பட்டது. அதில் 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது தெரிய வந்தது.

    மாதவரம், அம்பத்தூர் மண்டலத்தில் தான் அதிகளவு தெரு நாய்கள் உள்ளன. தெரு நாய்கள் கடித்தால்கூட எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக வெறிநாய் தடுப்பூசி போடப்படுகிறது.

    இதற்காக ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மட்டுமல்ல. நாய்களுக்கு குடல் புழு நீக்கம் செய்யவும் மருந்து கொடுக்கப்படுகிறது. தெரு நாய்களும் பாதுகாப்பாக உயிர் வாழ வேண்டும் என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாநகராட்சி கால்நடை அதிகாரி டாக்டர் கமால் உசேன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ‘வெறிநாய் தடுப்பூசி’ போடப்படுகிறது. 15 மண்டலங்களில் முதலாவதாக மாதவரத்தில் இத்திட்டம் நிறைவு பெற்றது. தொடர்ந்து ஆலந்தூரில் தற்போது நடை பெற்று வருகிறது.

    நாய்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று வலை மூலம் பிடித்து உடனடியாக இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்ட தெரு நாய்கள் அடையாளம் தெரிவதற்காக கலர் மை பூசப்படுகிறது.

    அவற்றின் மூலம் தடுப்பூசி போடாத நாய்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து ஊசி போடப்படுகிறது. 7 குழுக்களாக சென்று இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 11 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×