search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட சரவணக்குமார்
    X
    கைது செய்யப்பட்ட சரவணக்குமார்

    காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர்

    நடிகை காஜல் அகர்வாலுக்காக ரூ.60 லட்சத்தை ராமநாதபுரம் வாலிபர் இழந்துள்ளார். இணையதளம் மூலம் ஆசை காட்டி மோசடி செய்ததுடன், மிரட்டலும் விடுத்த சினிமா தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனான 27 வயது வாலிபர், சில மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இணையதள முகவரிக்குள் சென்றபோது இடையில் சில ஆபாச படங்கள் வந்துள்ளன. அதனை அகற்ற முயன்றபோது மற்றொரு இணையதள பக்கம் திறந்துள்ளது.

    அந்த இணையதளத்தில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

    இதை பார்த்ததும் அந்த தொழில் அதிபரின் மகன் அந்த பக்கத்திற்குள் சென்று தனது விவரங்களை பதிவு செய்ய தொடங்கி இருக்கிறார். தனது செல்போன் எண்ணை பதிவு செய்த அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்ற தகவலை கேட்டுள்ளது.

    காஜல் அகர்வால்

    நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த வாலிபர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய ரூ.50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.

    அதன்படி, அந்த வாலிபர் தனது வங்கி கணக்கு மூலம் பணத்தினை செலுத்தி உள்ளார். சற்றுநேரத்தில் அவரின் செல்போன் எண்ணுக்கு உறுதிசெய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தது.

    இதன் மூலம் நடிகை காஜல் அகர்வாலை சந்தித்து விடலாம் என்றும், அவரை தன்னுடைய இல்லத்துக்கும் அழைத்து வரலாம் என்று அந்த வாலிபர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இதுபற்றிய தகவலை அப்போது அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.

    இதற்கிடையே இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கறந்தவர்கள் மேலும் பணத்தை பறிக்க அந்த வாலிபர் யார், அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரித்துள்ளனர். அந்த வாலிபர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர். எனவே அவரை ஏதாவது ஒரு வழியில் சிக்க வைத்து, அதன் மூலம் மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர்.

    சில நாட்களில் மேலும் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் நடிகை காஜல் அகர்வாலை சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் உஷாரான அந்த வாலிபர், இது ஏமாற்று வேலை என்று உணர்ந்து பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.

    அதற்கு பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்த சிலநிமிடங்களில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து, மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளனர்.

    உடனே அந்த வாலிபர் அந்த படங்களை அழித்து விடுமாறு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்த ஆபாச புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவ விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபர், அந்த மோசடி பேர்வழிகளின் வலையில் விழுந்துவிட்டார். வேறு வழியின்றி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக ரூ.60 லட்சத்தை அனுப்பி உள்ளார்.

    இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், அவர் ‘பொன்முட்டையிடும் வாத்து’ என்று நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் அந்த வாலிபர் தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.

    ஒரு கட்டத்தில் தற்கொலை என்ற விபரீத முடிவையும் எடுத்துள்ளார். பின்னர் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினார்.

    பாசமாக வளர்த்த மகனை காணாமல் அந்த தொழில் அதிபரும், குடும்பத்தினரும் பரிதவித்தனர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடைசியில் போலீசாரின் உதவியை நாடினர். போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொல்கத்தாவில் வைத்து அந்த வாலிபரை மீட்டனனர். அவரிடம் விசாரித்த பின்னர்தான், நடிகை குறித்து ஆசையால், இணையதளம் மூலம் ரூ.60 லட்சத்தை இழந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:-

    தொழில் அதிபரின் மகனை காணவில்லை என்று புகார் வந்த பின்னர் அவரை தீவிரமாக தேடினோம். இந்த நிலையில் அந்த வாலிபர் தனது தந்தையை செல்போனில் அழைத்து, தன்னை தேடவேண்டாம் என்றும், தனக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

    எனவே அந்த வாலிபரின் செல்போன் அழைப்பு வந்ததை வைத்து விசாரித்த போது அவர் கொல்கத்தாவில் தங்கி இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து, வாலிபர் தங்கியிருந்த விடுதியில் அதிரடியாக நுழைந்து அவரை மீட்டு, அங்குள்ள போலீசார் எங்களிடம் ஒப்படைத்தனர். வாலிபரிடம் விசாரித்த பின்னர்தான், இணையதளம் மூலம் நடந்த மோசடி பற்றிய முழு விவரம் தெரிந்தது.

    இதனை தொடர்ந்து அவர் பணம் செலுத்திய வங்கி கணக்கினை வைத்து விசாரித்தோம். அது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பாவனாகோட்டை மணிகண்டன் என்பவருடையது என்று தெரிந்ததால், அவரிடம் விசாரித்தோம். அப்போது மணிகண்டன் கூறுகையில், “என்னுடைய நண்பர் கோபாலகிருஷ்ணன் என்ற சரவணக்குமார் (37), சினிமா தயாரித்து வருகிறார். பட தயாரிப்புக்கு ஒருவர் உனது வங்கிக்கணக்கில் பணம் அனுப்புவார். அவர் பணம் அனுப்பும் போது எல்லாம் என்னிடம் எடுத்துக் கொடுக்க வேண்டும் என கூறினார். அவர் சொன்னபடி பணம் வந்தது. நானும் சரவணக்குமாரிடம் எடுத்துக்கொடுத்தேன்” என்று தெரிவித்தார்.

    அவர் அளித்த தகவலின்படி, சென்னை அசோக் நகர் பகுதியில் தங்கியிருந்த சரவணக்குமாரை மடக்கி பிடித்தோம். அவர் ராமநாதபுரம் தொழில் அதிபர் மகனை மிரட்டி பணம் பறித்ததும், மிரட்டி வந்ததும் தெரியவந்தது. எனவே சரவணக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட சரவணக்குமார் இதுபோன்று பல நபர்களிடம் மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில் அதிபர் மகனிடம் ரூ.60 லட்சம் பறித்து இருந்தாலும், சரவணகுமாரிடம் இருந்து ரூ.9 லட்சத்தை மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற தொகையை அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் செலவழித்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறினார்.

    நடிகையை சந்திக்கும் ஆசையால் அவசரப்பட்டு, சில நொடிகளில் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்ததால் ஏற்பட்ட விளைவு, ஒரு வாலிபரை தற்கொலை முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளியதுடன், பணம் பறிபோகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. போலீசார் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் அவர் மீட்கப்பட்டுள்ளார். எனவே சினிமா, இணையதளம் மீது அதீத மோகம் கொண்டவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் ஆகும்.

    Next Story
    ×