search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மினி பஸ்
    X
    மினி பஸ்

    மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து 5 வழிதடங்களில் சுமால் பஸ்கள் இயக்கம்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வசதிக்காக 5 வழித்தடங்களில் ‘சுமால்’ பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்டமாக 42 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து வருகிறது. தற்போது பயணிகள் வசதிக்காக ஆலந்தூர், எல்.ஐ.சி., டி.எம்.எஸ்., வண்ணாரப்பேட்டை, மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து கூடுதலாக 11 ‘சுமால்’ பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் புதிய 5 வழித்தட பாதைகளில் செல்லும்.

    சுமால் பஸ் வழித்தடம் நம்பர் எஸ்84 ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து டி.எல்.எப். வரை செல்லும். எல்.ஐ.சி. மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எஸ் 30 ‘சுமால்’ பஸ் விவேகானந்தர் இல்லம் வரை சென்றுவரும்.

    டி.எம்.எஸ். மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எஸ் 36 ‘சுமால்’ பஸ் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் வரை சென்று வரும். வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எஸ்72 ‘சுமால்’ பஸ் ஐ.ஓ.சி. வரை செல்லும். எஸ்71 சுமால் பஸ் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வரை சென்றுவரும்.

    புதிதாக 11 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த ‘சுமால்’ பஸ்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறப்பட்டு செல்லும். மெட்ரோ ரெயில் பயணிகள் இந்த ‘சுமால்’ பஸ் வசதிகள் மூலம் பயன்பெறுவார்கள்.

    மாநகர, போக்குவரத்து கழகம் மூலம் தற்போது 14 வழித்தடங்களில் சுமால் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோயம்பேடு சி.எம்.பி.டி., அசோக்நகர், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகள் வசதிக்காக சுமால் பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

    மெட்ரோ ரெயில் நிலையங்கள் பலவற்றில் ஷேர் ஆட்டோ, ஷேர் கார் வசதிகளும் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.
    Next Story
    ×