search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்புறம்பியத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.
    X
    திருப்புறம்பியத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

    கும்பகோணம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் கிழிப்பு- 10 பேர் மீது வழக்கு

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே திருப்புறம்பயத்தில் நேற்று ஒரு படத்திறப்பு விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரை மர்ம கும்பல் கிழித்து விட்டனர்.

    இதனை அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 35) மற்றும் சக்திவேல் (35) ஆகியோர் பேனரை கிழித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுவாமி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கர், சக்திவேல் ஆகியோரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதற்கிடையே பேனரை கிழித்ததால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஸ்கர் வீட்டுக்கு சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுபற்றி பாஸ்கரின் தாய் ராணி, சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்ததாக கூறி கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதற்கிடையே திருமாவளவன் பிளக்ஸ் பேனரை கிழித்தவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்புறம்பயம் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கும்பகோணம் டி.எஸ்.பி.ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை இருந்து வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்புறம்பியம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×