search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    தகவல் அறியும் சட்ட திருத்தத்தை கண்டித்து போராட்டம்- கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

    மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில் விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004-ல் அமைந்தவுடன் எடுத்த மிகமிகப் புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஒளிவு மறைவை ஒழித்து வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டது.

    மத்திய-மாநில அரசுகள் மற்றும் அதைச் சார்ந்த பல்வேறு துறைகளில் நடக்கிற எந்த நடவடிக்கையையும் சாதாரண குடிமக்கள் உரிய முறையில் விண்ணப்பித்து மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி 30 நாட்களுக்குள் தகவல் பெறுகிற உரிமையை அன்றைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கியது. இதுவரை இச்சட்டத்தை 70 லட்சம் பேர் பயன்படுத்தியிருக்கின்றனர்.

    2014-ல் 2 லட்சம் கோரிக்கைகள் இந்த அமைப்பிற்கு அனுப்பப்பட்டது. அது தற்போது 16 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே எழுந்துள்ள விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. இதை மத்திய ஆட்சியாளர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தில் பல்வேறு பதவிகள் நிரப்பப்படாமல் முடக்குகிற பணியை பா.ஜ.க. அரசு செய்து வந்தது. 2018-ல் மொத்தமுள்ள 11 தகவல் ஆணையர் பதவிகளில் 8 பதவிகள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கடும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல, தகவல் ஆணையரிடம் 26,000 மனுக்கள் மேல் முறையீட்டிற்காக நிலுவையில் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்த அமைப்பை முடக்கி வைக்கிற பணியை பா.ஜ.க. செய்து வந்தது.

    கடந்த பாராளுமன்றத்தில் 2018-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை திருத்துகிற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க.வுக்கு உள்ள அசுர பலத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவுகள் 13, 16 மற்றும் 27-ல் திருத்தங்கள் கொண்டு வந்து மக்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதை எதிர்த்து அன்னை சோனியா காந்தி கடுமையாக மக்களவையில் உரையாற்றியிருக்கிறார்.

    மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த திருத்தத்தின் மூலம் முதன்மை தகவல் ஆணையர், மாநிலங்களில் தகவல் ஆணையர்களின் பணிக்காலம், ஊதியம் ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது. இந்த திருத்தத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகர்க்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையை தகர்க்கிற வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த திருத்தம் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது.

    இந்நிலையில், மத்திய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறை சார்பில் விரைவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×