search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களை ஏற்றி வந்த பள்ளிவேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    மாணவர்களை ஏற்றி வந்த பள்ளிவேன் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 26 மாணவர்கள் படுகாயம்

    திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள முள்ளிப்பாடியில் சூசையப்பர் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கிராமப்புற பள்ளி என்பதால் பள்ளி வாகனம் கிடையாது.

    இதனால் மோளப்பாடியூர், எட்டிகுளத்துப்பட்டி, இ.புதூர், கோவிலூர், மகாலட்சுமிபட்டி ஆகிய கிராமங்களில் இருந்து தனியார் வேன்கள் மூலம் பள்ளிக்கு மாணவ- மாணவிகள் வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் ஒரு வேனில் 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது.

    மோளப்பாடியூர்- பாடியூர் சாலையில் வேன் வந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிரைவர் சாலையோரம் ஒதுக்கினார். அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதனால் வேனுக்குள் இருந்த மாணவ-மாணவிகள் பயங்கர சத்தமிட்டு கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை வெளியே மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    காயம் அடைந்த மாணவ-மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேனில் வந்த 30 பேரில் 26 பேர் படுகாயம் அடைந்தனர். பானுமதி (வயது13), கவுசல்யா தேவி (11) ஆகிய 2 பேருக்கு கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து அறிந்ததும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாசை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து அவரது தலைமையில் நிலைய மருத்துவர் மகாலட்சுமி, கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அனைத்து மருத்துவர்களும் உடனடி சிகிச்சை மேற்கொண்டனர். விபத்து குறித்து அறிந்ததும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்து கண்ணீர் விட்டு கதறத் தொடங்கினர்.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×