என் மலர்

  செய்திகள்

  மேட்டூர் அணை
  X
  மேட்டூர் அணை

  மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அணைக்கு நேற்று 39.13 அடியாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 40.15 அடியாக அதிகரித்தது.
  மேட்டூர்:

  கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

  இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் கடந்த 17-ந் தேதி 2 அணைகளில் இருந்தும் 850 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

  84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 72 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு 11 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

  இதேபோல 124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து வருகிறது.

  கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 22-ந் தேதி ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. இதனால் அன்று காலை 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. நேற்று நீர் வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் வரும் தண்ணீரை 24 மணி நேரமும் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பாறைத்திட்டுகள் தண்ணீரில் மூழ்கி அருவி வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

  ஒகேனக்கல் வரும் தண்ணீர் நேற்று காலை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 1500 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலையில் 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் உயர தொடங்கியுள்ளது.

  மேட்டூர் அணைக்கு இன்று காலை 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 39.13 அடியாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 40.15 அடியாக அதிகரித்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். அப்போது நீர் மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

  கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பண்ணவாரி நீர் தேக்க பகுதியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியில் உள்ள அடிபாலாறு, பண்ணவாரி பகுதிகளில் காவிரி ஆற்றில் நுரையுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் வரத்து அதிகரித்ததால் செட்டிபட்டி, கோட்டையூர், பன்ணவாரிபரிசல் துறைகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீனவர்கள் தங்கள் முகாம்களை மேடான பகுதிக்கு மாற்றினர்.
  Next Story
  ×