search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி சொத்துக்களை மீட்டார்.
    X
    வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி சொத்துக்களை மீட்டார்.

    வயதான பெற்றோரை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்த மகள்களிடம் இருந்து சொத்து மீட்பு

    மதுரை அருகே வயதான பெற்றோரிடமிருந்து வீடு உள்ளிட்ட சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கவனிக்காமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த மகள்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்க கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
    பேரையூர்:

    பெற்றோர்களிடம் இருந்த சொத்துக்களை பறித்துக் கொண்டு அவர்களை கவனிக்காமல் கைவிடும் மகள்கள் மற்றும் மகன்கள் தொடர்பான புகார்கள் தற்போது அதிகளவில் வருகின்றன. இது போன்ற புகார்கள் மீது தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரை அருகே உள்ள திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த அழகர்சாமி(74) மற்றும் அவரது மனைவி சகுந்தலா(70) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான பாண்டியன் நகரில் உள்ள வீடு, 90 பவுன் நகைகள் மற்றும் காரை தனது மகள்கள் கிருத்திகா, சியாமளா ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருடன் இணைந்து அபகரித்துக் கொண்டதாகவும், பின்னர் இருவரையும் திருப்பரங்குன்றத்தில் உள்ள லட்சுமி முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் தற்போது இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் நல ஆணையத்தில் புகார் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகரின் உத்தரவின் பேரில் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் முதியவர்கள் அழகர்சாமி சகுந்தலா தம்பதியினரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

    அதேபோல் சொத்தினை கைப்பற்றி வைத்திருக்கும் மகள் கிருத்திகா, சியாமளா மற்றும் அவருக்கு உதவிய கணேசனை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது சொத்துக்களைப் பறித்துக் கொண்டு பெற்றோரை கவனிக்காமல் பிள்ளைகள் கைவிட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மகள் அனுபவித்து வந்த திருநகர் பாண்டியன் நகரில் உள்ள ரூ. 70 லட்சம் மதிப்பிலான வீட்டின் பதிவுகளை ரத்து செய்த ஆர்.டி.ஓ. முருகேசன் அந்த வீட்டினை மீண்டும் அழகர்சாமி- சகுந்தலா தம்பதியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான 90 பவுன் நகை மற்றும் காரை மீட்டு கொடுக்க திருநகர் போலீசாருக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
    Next Story
    ×