search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையன் பங்கேற்ற காட்சி.
    X
    ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையன் பங்கேற்ற காட்சி.

    நாகர்கோவில் சாலை விரிவாக்கத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்

    நாகர்கோவிலில் சாலை விரிவாக்கம் செய்யும் மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண சாலைகளை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்தது.

    நாகர்கோவில், செட்டி குளம், கோட்டார் பகுதிகளில் சாலையை விரிவாக்க மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோட்டாரில் சில இடங்களில் அளவீடு செய்து குறியீடு இடப்பட்டது.

    இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எதிர்ப்பு தெரிவித்தது. மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து இன்று கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஏற்பாடு செய்த கடையடைப்பு போராட்டத்திற்கு குமரி மாவட்ட தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. அதே நேரம் கோட்டார் வர்த்தக சங்கம் கடை அடைப்பில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நாகர்கோவிலில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    கோட்டார் பகுதியில் ஒருசில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் போராட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

    நாகர்கோவில் நகரில் கோட்டார், செட்டிகுளம் பகுதிகளில் வணிகர்கள் அதிக அளவில் குடியிருப்பதோடு, வர்த்தக நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்கள். அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் அரசு முயற்சி செய்கிறது. அதற்காகவே இங்கு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வியாபாரிகளை அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    நாகர்கோவிலில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து பிரதான சாலை நாகர்கோவில் வருகிறது. இந்த சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினாலேயே போக்குவரத்து நெரிசல் குறையும். ஆனால் சில்லறை வர்த்தகத்தை ஒழிக்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கவும் அரசு முயற்சிக்கிறது. அதன் காரணமாகவே சில்லறை வியாபாரிகளை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் விரட்ட பார்க்கிறார்கள். சாலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்யாதது ஏன்? சென்னையிலும் பெத்தேல்புரம் என்ற பகுதியில் 5 ஆயிரம் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் காலி செய்ய முயற்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் நாராயணராஜ், பொருளாளர் ஜேம்ஸ் மார்‌ஷல், மாநில துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், மாவட்ட துணைத் தலைவர் ராஜதுரை, முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, ரெஜினால்டு, திராவிடர் கழக நிர்வாகி வெற்றிவேந்தன், காந்திய மக்கள் இயக்க நிர்வாகி கதிரேசன், மார்க்சிஸ்டு லெனினிஸ்டு கட்சியின் நிர்வாகி பால்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×