search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி

    10 சதவீத இடஒதுக்கீடு - அனைத்துக்கட்சியினரிடம் கருத்து கேட்க நாராயணசாமி முடிவு

    பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக்கட்சியினரிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நடந்த விவாதம் வருமாறு:-

    சிவா (தி.மு.க.): மத்திய அரசு முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடை கொண்டு வந்துள்ளது. இது சமூகநீதிக்கு எதிரானது. தமிழகத்தில் தி.மு.க. இந்த இடஒதுக்கீடை எதிர்க்கிறது.

    புதுவையில் சுகாதாரத்துறையில் இடஒதுக்கீடை அமல்படுத்தியுள்ளனர். சென்டாக்கில் பொறியியல், கலை, அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதில் இடஒதுக்கீடை அரசு அமல்படுத்தப்போகிறதா? இதை அமல்படுத்தக்கூடாது. அவசர, அவசரமாக இதை அமல்படுத்தவேண்டிய அவசியம் என்ன?

    சாமிநாதன் (பா.ஜனதா): தமிழகத்தில் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. பாராளுமன்றத்திலும் ஆதரவு அளித்துள்ளனர்.

    சிவா: காங்கிரசின் கொள்கை எங்கள் கொள்கை அல்ல. தி.மு.வு.க்கு தனி கொள்கை உள்ளது.

    லட்சுமிநாராயணன் (காங்கிரஸ்): பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு சட்டவிரோதம். புதுவை மாணவர்கள் ஏற்கனவே பிராந்திய ஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒதுக்கீடும் புதுவை மாணவர்களின் இடங்களை பறிக்கும். அவசரகதியில் அரசாணை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு தனியாக கமி‌ஷன் அமைத்து கருத்துக்களை கேட்க வேண்டும்.

    கீதாஆனந்தன்(தி.மு.க.): எத்தனையோ பிரச்சினைகளுக்கு முதல்-அமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டம், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்துகிறார். ஆனால் இந்த இடஒதுக்கீட்டிற்கு மட்டும் ஏன் கருத்து கேட்காமல் அமல்படுத்துகிறீர்கள்? அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும்.

    சாமிநாதன்: இந்த இடஒதுக்கீட்டிற்கு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதில் 80 ஜாதியினர் இடம்பெற்றுள்ளனர். இடஒதுக்கீட்டில் பிராமணர் மட்டும் பயன்பெறுவர் என பேசுவது தவறானது. முற்போக்கு ஜாதியிலும் கூலி வேலை செய்பவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் உள்ளனர். மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் மேற்கு வங்க மாநிலத்தில்கூட இந்த ஒதுக்கீடை அமல்படுத்தி உள்ளனர்.

    சிவா: எந்த காரணத்தை கொண்டும் புதுவையில் இந்த இடஒதுக்கீடை அமல்படுத்தக்கூடாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை திணிக்கிறது.

    சாமிநாதன்: தமிழர் களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது என்ற வார்த்தை களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். இதைப்போல எங்களுக்கு பேசத்தெரியாதா? இலங்கை யில் தமிழர்களை கொன்று குவிக்க காரணமானது யார்? தி.மு.க. தானே?

    சிவா: இந்த இடஒதுக்கீடை அமல்படுத்தக்கூடாது என அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

    அன்பழகன்(அ.தி.மு.க.): காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஆதரிக்கிறது, தமிழகத்தில் ஆதரிக்கிறது. அவர்களோடு தி.மு.க. கூட்டணியில் உள்ளது. ஆதரவை வாபஸ் பெற வேண்டியதுதானே? ஏன் நாடகமாடுகிறீர்கள்?

    சிவா: இந்த இடஒதுக்கீடு வேலைவாய்ப்பிற்கு என கூறியுள்ளனர். ஆனால் புதுவையில் கல்வியில் ஒதுக்கீடு கொண்டுவந்துள்ளனர். இதனால் புதுவையில் 30 மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகரித்துள்ளனர்.

    சென்டாக்கில் பொறியியல், கலை, அறிவியல் என 10 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 10 சதவீதமாக ஆயிரம் இடங்கள் சென்றுவிட்டும். பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடை ரத்து செய்யுங்கள். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துங்கள், கமி‌ஷன் அமையுங்கள். அதன்பின் முடிவெடுங்கள்.

    அனந்தராமன் (காங்.,): ஒட்டுமொத்தமான இடஒதுக்கீடையும் ரத்து செய்ய வேண்டும் என்ற முகாந்திரத்தில்தான் இந்த ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் கிரீமிலேயர் கொண்டுவந்தனர். நாட்டில் கலவரம் வெடித்தது.

    வி.பி. சிங் மண்டல் கமி‌ஷன் அமல்படுத்தியபோதும் வடமாநிலங்களில் உயர் ஜாதியினர் கலவரத்தில் இறங்கினர். இப்போதும் இடஒதுக்கீடை ரத்துசெய்யவே மத்திய பா.ஜனதா அரசு பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடை கொண்டுவந்துள்ளனர்.

    தமிழகம், புதுவை வேறு வேறு அல்ல. ஒரே மொழி பேசும் மக்கள் தான் வாழ்கின்றனர். இவ்வி‌ஷயத்தில் தமிழகத்தை புதுவை பின்பற்ற வேண்டும். இதில் அவசரம் காட்டக்கூடாது. நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இதை அமல்படுத்தினால் 80 சதவீத மக்கள் பாதிக்கப்படுவர்.

    சங்கர் (பா.ஜனதா): சட்டமன்ற அலுவல் பட்டியலில் உள்ளவற்றை முதலில் பேசுங்கள். பின்னர் மற்றவற்றை பேசலாம்.

    அன்பழகன்: தமிழக முதல்-அமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியும், எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தார். இது சமூகநீதிக்கு எதிரானதால் அவசரம் காட்ட வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் அமல்படுத்துங்கள் என கோரிக்கை வைத்தனர். மு.க.ஸ்டாலின் எதிர்ப்பையும் மீறி புதுவையில் காங்கிரஸ் அரசு இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

    அரசு மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீடு அமல்படுத்துவதாக மருத்துவ கவுன்சிலிடம் கூறி 37 இடங்களை அரசு கூடுதலாக பெற்றுள்ளது. ஆளும்கட்சி உறுப்பினர்களே அரசை எதிர்த்து பேசுகின்றனர். ஏன் இப்படி ஒரு நாடகம் நடத்துகிறீர்கள்? புதுவையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கு எந்த ஒதுக்கீடும் கிடையாது. உள்ளூர் தாழ்த்தப்பட்டோர் 9.33 சதவீதம்தான் உள்ளனர். மீதமுள்ள 7 சதவீதத்தினர் வெளியூர் தாழ்த்தப்பட்டோர்.

    ஆனால் இந்த அரசு 16.33 சதவீதம் சிறப்புக்கூறு நிதியாக ஒதுக்கி வருகிறது. இதில் வெளியூர் தாழ்த்தப்பட்டோர் எந்த பயனும் அடைய முடியாது. பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டில் வெளியூர் தாழ்த்தப்பட்டோரையும் இணைத்தால் அவர்கள் பயனடைவார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி: பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடை மத்திய அரசு அமல்படுத்தியது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினர். தமிழகம், புதுவை மட்டுமே இதை அமல்படுத்தவில்லை.

    கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளனர். மருத்துவ கவுன்சிலிடம் 50 இடங்களை கூடுதலாக தர வேண்டும் என கடிதம் எழுதி கேட்டோம். அவர்கள் பொருளாதார இடஒதுக்கீடை அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு 30 இடங்களை கூடுதலாக அளித்துள்ளனர்.

    இந்த ஒதுக்கீடை அமல்படுத்துவதா? வேண்டாமா? என நாம்தான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட கல்லூரிகளில் பொருளதார ரீதியான இடஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து எம்.எல்.ஏ.க்கள், அனைத்துக் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×