search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்க இன்று முதல் தடை

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தர்மபுரி:

    கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.எஸ்.ஆர். மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    இதையடுத்து இரண்டு அணைகளிலும் இருந்து இன்று 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை அளவீடு செய்து வருகின்றனர்.

    இன்றுகாலை ஒகேனக்கல்லுக்கு 7,600 கனஅடியாக தண்ணீர் வந்தது. ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் இரு கரையை தொட்டப்படி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமானதால் அங்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    நீர்வரத்து அதிகரித்ததால் எண்ணெய் மசாஜ் செய்து சுற்றுலா பயணிகள் மெயினருவியில் குளித்து மகிழந்தனர்.

    ஒகேனக்கல்லில் 5 ஆயிரம் கனஅடிக்கும் மேல் நீர்வரத்து வந்தால் மாமரத்துகடுவு பகுதியில் பரிசல் சவாரி செய்வதை தடை விதிக்கப்படுவது வழக்கம்.

    ஒகேனக்கல்லில் இன்று 7,600 கனஅடி நீர்வரத்து அதிகமாக வருவதால் சுற்றுலாவுக்கு வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்க மட்டும் தடை விதிக்கப்படும் என்று தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார்.

    பரிசலில் செல்ல தடை என்ற உத்தரவை தொடர்ந்து பரிசல் நிலையம் இன்று காலை முதல் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×