search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    புத்தகங்கள் வாழ்க்கையை உயர்த்தும் பொக்கி‌ஷங்கள்- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேச்சு

    நல்ல புத்தகங்கள் வாழ்க்கையில் உங்களை உயர்த்தும் பொக்கிஷங்களாக இருக்கின்றன. எனவே புத்தகங்களை நேசியுங்கள் என்று அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.

    கரூர்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்த புத்தக கண் காட்சியினை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர் உலக போதை தினத்தை முன்னிட்டு போதையில் பயணம்... பாதையில் மரணம்... என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பரிசுகள் பெறுவதற்கு அதிகம் மாணவிகள் வந்து ள்ளீர்கள். இன்றைக்கு கல்வியில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் சாதிக்கின்றனர். டி.என். பி.எஸ்.சி. போன்ற போட்டி தேர்வுகளிலும் பெண் களே அதிகம் வெற்றி பெறுகிறார்கள். காரணம் பெண்கள் அமைதியாக, அடக்கமாக கொடுக்கும் வேலைகளை தங்களின் சொந்த வேலையாக கருதி செய்கின்றனர்.

    ஆனால் மாணவர்கள் அவ்வாறு இருப்பதில்லை. பள்ளி கல்லூரிகளுக்கு ஒழுங்காக போகாமல் கட் அடிக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக பிறந்து துணிச்சலான தலைவியாக உருவெடுத்து தமிழகத்தின் உரிமைகளையும், பெண்களின் உரிமைகளை மீட்டெடுத்தார். இன்றைக்கு பெண்களுக்கு அதிகம் பாதுகாப்பு உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    இந்திய துணைகண்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் தொலை நோக்கு திட்டங்களே காரணம். அதேபோன்று தேசிய அளவில் உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 25.8 சதவீதம் என்றால், தமிழகத்தில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 49.6 சதவீதமாக இருக்கிறது. தமிழக அரசு 50 லட்சம் மாணவர்களுக்கு மடி க்கணினி வழங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆண்டு 29 ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார்.

    செல்போன் வந்தபின்னர் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இன்றைக்கு 3 வயது குழந்தைகளின் கைகளிலும் செல்போன் தவழுகிறது. சமூகத்தை சீரழிக்கும் டிக்-டாக்கினை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல புத்தகங்கள் வாழ்க்கையில் உங்களை உயர்த்தும் பொக்கிஷங்களாக இருக்கின்றன. எனவே புத்தகங்களை நேசியுங்கள். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவர்கள், காந்திகிராமம் விஜயலட்சுமி பன்னாட்டு பள்ளிக்கூட மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பரிசுகள் பெற்றனர்.

    Next Story
    ×