search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேமரா (கோப்புபடம்)
    X
    கேமரா (கோப்புபடம்)

    பள்ளி ஆசிரியை அறையில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து மிரட்டிய காதலன்

    திருச்சி அருகே பள்ளி ஆசிரியை அறையில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து மிரட்டிய காதலன் மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தேவகி (வயது 29, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணித பட்டதாரி ஆசிரியையான இவர் தற்போது புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார்.

    இன்று காலை அவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    எனது பெற்றோர் காலமாகி விட்டனர். எனது சகோதரிக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். நான் முதலில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தேன். கோட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்தேன். அப்போது அடிக்கடி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு செல்வேன்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த டெக்கரேட்டர்ஸ் தொழில் செய்து வரும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து அவர் என்னை டவுன்ஹால் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் என்னை குடி வைத்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார்.

    தற்செயலாக ஒருநாள் எனது வீட்டின் ஜன்னலில் கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இது பற்றி காதலனிடம் கேட்ட போது, உன்னை நான் முழுமையாக படம் பிடித்துள்ளேன். என்னிடம் நீ மன்னிப்பு கேட்பதோடு, திருமணம் செய்து கொள்ள என்னை கெஞ்சவேண்டும் என்று கூறினார்.

    அவ்வாறு செய்யாவிட்டால் உன்னை பற்றி ரகசிய கேமராவில் படம் பிடித்த காட்சிகளை சமூக வலை தளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டினார். இதுபற்றி நான் கோட்டை போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை. எனவே கலெக்டர் உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு மீது உரிய விசாரணை நடத்துமாறு கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கோட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். மனு அளித்துவிட்டு வெளியே வந்த அந்த ஆசிரியையை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர் பெண்கள் என்றால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவதாக கூறி ஆவேசம் அடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×