search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி

    மக்கள் பிரச்சினைக்காகவே சட்டசபையை கூட்டியுள்ளோம் - நாராயணசாமி விளக்கம்

    மக்கள் பிரச்சினைக்காகவும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்தான் அவசரமாக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய எதிர்கட்சிகள் சிறப்பு சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் அரசு தீர்மானங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்கள்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் எதற்கு? என கேள்வி எழுப்பி உறுப்பினர்களின் உரிமையை பறிப்பதாகக்கூறி வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புக் கூட்டம் ஏன்? என விளக்கம் தெரிவித்து சபையில் பேசினார். அவர் பேசியதாவது:-

    முக்கிய பிரச்சினைக்காகத்தான் சபையை கூட்டியுள்ளோம். பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளோம்.

    இதனிடையே மத்திய அரசு நீர் பாதுகாப்பை வலியுறுத்தி அனைத்து சட்டமன்றங்களிலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமரும் தனது உரையில் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவதை பார்த்து வருகிறோம். புதுவையில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. இருப்பினும் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நாம் செயல்பட வேண்டும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நீர் மேலாண்மையை, நீரை பாதுகாக்க என்ன செய்யலாம் என விவாதிக்க வேண்டியுள்ளது. இதற்காகத் தான் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம்.

    இது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு திணிக்க நினைக்கிறது. இதற்கு புதுவை மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்புக்குரலை மத்திய அரசுக்கு தீர்மானமாக தெரிவிக்க வேண்டும்.

    ஏற்கனவே மருத்துவ படிப்பில் சேர மத்திய அரசு நீட் தேர்வை கொண்டுவந்தது. தற்போது நெக்ஸ்ட் என்ற தேர்வை கொண்டுவந்துள்ளனர். இத்திட்டம் மாணவர் உயிரை பறிக்கும் செயலாக உள்ளது. பல மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துள்ளனர்.

    அதுபோல புதிய கல்விகொள்கை மூலம் இந்தியை திணிக்க பார்க்கின்றனர். இந்தி திணிப்பிற்காக ஏற்கனவே நாம் பல உயிர்களை பலி கொடுத்துள்ளோம். இதற்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

    மக்கள் பிரச்சினைக்காகத்தான் சட்டசபையை கூட்டியுள்ளோம். மக்கள் பிரச்சினைக்காகவும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும்தான் அவசரமாக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×