search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறையில் பெய்துவரும் கனமழை காரணமாக சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுவதை காணலாம்.
    X
    வால்பாறையில் பெய்துவரும் கனமழை காரணமாக சோலையார் பிர்லா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுவதை காணலாம்.

    ஊட்டி, வால்பாறை பகுதியில் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் ஊட்டி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    வால்பாறை:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த புதன்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று மதியம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக வால்பாறை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வாழைத் தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சோலையார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்வு காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வால்பாறையில் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால் அவர்கள் தங்கள் வண்டிகளின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி செல்கின்றன. கொட்டும் மழையிலும் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் கவர்கள் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக வால்பாறை பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    பொள்ளாச்சியில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதேபோல் கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை பகுதியிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக மலை பகுதி முழுவதும் பசுமையாக காட்சி தருகிறது. ஊட்டியில் நேற்று பெய்த மழையால் அரசு தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், ரோஜா பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், படகு இல்லம், காந்தல் பகுதிகளில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்கள், ஆட்டோ, வேன், டாக்சி டிரைவர்கள் குளிரில் இருந்து தங்களை காத்து கொள்ள பஸ் நிலைய பகுதிகளில் தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் குடை பிடித்தபடியும், கம்பளி ஆடை அணிந்துபடியும் சென்று வருகின்றனர்.

    குன்னூர், கோத்தகிரி, கட்டப்பெட்டு, சோலூர் மட்டம் அருவங்காடு, கேத்தி, பர்லியார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×