search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டுக்குள் பிணமாக கிடக்கும் பானுமதி உடலை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
    X
    வீட்டுக்குள் பிணமாக கிடக்கும் பானுமதி உடலை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    திண்டிவனத்தில் மாமியாரை கத்திரிகோலால் குத்தி கொன்ற மருமகன்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சொத்தில் பங்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை கத்திரிகோலால் குத்திக் கொன்றான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சிவ பிரகாசம். இவரது மனைவி பானுமதி (வயது 54). இவர்களுக்கு சாந்தி (34) என்ற மகளும், பாலாஜி (28) என்ற மகனும் உள்ளனர். பாலாஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    பானுமதி தனது மகள் சாந்தியை உறவினரான முருகானந்தம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு பாவனா (12) என்ற மகளும், கிஷோர் (8) என்ற மகனும் உள்ளனர். முருகானந்தம் மாமியார் வீட்டில் தங்கியிருந்து கோழி கறிகடையும், பக்கோடா கடையும் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் முருகானந்தம் தனது மனைவி சாந்தியிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துவந்தார். இதனால் தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு முருகானந்தம் தனது மனைவி சாந்தியிடம் தகராறு செய்தார். உடனே அங்கிருந்த பாலாஜி ஏன் சொத்துக்காக அடிக்கடி சண்டைபோடுகிறீர்கள் என்று கேட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் மைத்துனர் பாலாஜியை கத்திரிகோலால் பல இடங்களில் குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் கூச்சல்போட்டு அலறினார். மகனின் அலறல்சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பானுமதி எழுந்து ஓடிவந்து தடுக்க முயன்றார்.

    முருகானந்தம் ஆத்திரம் அடைந்து மாமியார் உயிருடன் இருந்தால் தனக்கு சொத்து கிடைக்காது என கருதி அவரையும் கத்திரிகோலால் கழுத்தில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பானுமதி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை அறிந்ததும் முருகானந்தம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து ரோசனை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று வீட்டுக்குள் பிணமாக கிடந்த பானுமதியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பாலாஜியை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    தப்பி ஓடிய முருகானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

    மாமியாரை கத்திரி கோலால் குத்திக்கொன்ற சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×