search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான வேன்
    X
    விபத்துக்குள்ளான வேன்

    பாளை அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

    பாளை அருகே திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றபோது பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 6 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செய்துங்கநல்லூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகர் இந்திரா தெருவைச் சேர்ந்தவர் அருணாசல பாண்டியன் (வயது 34). இவரது மனைவி கவுசல்யா (22). இவர்களது 3 மாத ஆண் குழந்தை அனீஸ் பாண்டி.

    அருணாசலபாண்டி குடும்பத்தினரும், அவரது உறவினர்கள் முருகேசன் (42), செந்தில்குமார் (38), சுகுமார் (58) ஆகியோரும் தங்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றனர்.

    இவர்கள் 18 பேர் ஒரு வேனில் நேற்று மாலை புறப்பட்டனர். வேனை முருகேசன் ஓட்டிச்சென்றார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் வேன் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் கால்வாய் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது வேன் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்தவாறு 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த ஜெகதீஸ்வரன், அருணாசல பாண்டி, அவரது குழந்தை அனீஸ்பாண்டி, முத்துலட்சுமி, பாக்கியலட்சுமி, நித்தீஸ் ஆகிய 6 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    மேலும் செந்தில்குமார் (38), அவரது மகன் விஷ்ணு (11), மகள் ஸ்வேதா (8), சூர்யபிரபா (21), சுகுமார் மற்றும் அவரது மனைவி மாரீஸ்வரி, கவுசல்யா (22), மல்லிகா (65), முருகேசன் (42) ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர். மற்ற 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயஜோஸ் மற்றும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பலியான 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தைக்கு மொட்டைபோட சென்ற தந்தை, மகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×