search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட பழனிவேல் - உடலை கடத்த பயன்படுத்தப்பட்ட கார்
    X
    கொலை செய்யப்பட்ட பழனிவேல் - உடலை கடத்த பயன்படுத்தப்பட்ட கார்

    என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - போலீசார் விசாரணை

    சின்னசேலம் அருகே என்.எல்.சி. ஊழியரை மனைவியே கொலை செய்து, பிணத்தை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சின்னசேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையில் நேற்று இரவு 10 மணியளவில் போலீசார் சேலம் - விருத்தாசலம் சாலையில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி பகுதியில் ஒரு காரில் இருந்து புகை வருவதாக போலீசாரிடம் கூறினர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் செம்பாகுறிச்சி பகுதிக்கு சென்றனர்.

    அங்கு சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் டயரில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.

    காரின் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். அப்போது காரின் நடுவில் சாக்குமூட்டை ஒன்று கட்டப்பட்ட நிலையில் இருந்தது.

    போலீசார் அதனை பிரித்து பார்த்தனர். அதில் ஆண் பிணம் ஒன்று இருந்தது. அவரது தலையில் பலத்த ஆயுதங்களால் தாக்கிய காயங்கள் இருந்தது.

    உடனே போலீசார் அந்த காரில் இருந்த சாக்குமூட்டையை வெளியே எடுத்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர். காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தியபோது அது கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கார் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் உஷார் அடைந்து தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர்.

    அதில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்தது. நெய்வேலி என்.எல்.சி. ஊழியர் பழனிவேல்(வயது 52) என்பது தெரியவந்தது.

    இவர் நெய்வேலி புதுநகர் 2-வது வட்டம் நெல்லிக்கனி தெருவை சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி அஞ்சலை(45).

    பழனிவேல் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக பழனிவேலுவுக்கும், அவரது மனைவி அஞ்சலைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. மேலும் பழனிவேல் மனைவி அஞ்சலையை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அஞ்சலை தனது தம்பிகளிடம் புகார் கூறினார். அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். பழனிவேலை கொலை செய்ய திட்டம் தீட்டினர். பின்பு நேற்று மாலையில் பழனிவேலுவை அவரது மனைவி அஞ்சலை மற்றும் தம்பிகள் சேர்ந்து அவரை ஆயுதங்களால் தலையில் அடித்துள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த பழனிவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை அறிந்ததும் அவர்கள் பழனிவேல் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டினர். பின்பு மூட்டையை காரில் ஏற்றி சின்னசேலம் அருகே காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சாலையோரம் காரை நிறுத்தி விட்டு காருக்கு தீ வைத்து உள்ளனர்.

    அப்போது அந்த வழியாக ஆட்கள் நடமாட்டம் வந்ததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    போலீசார் விசாரணை

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் நெய்வேலி டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் பழனிவேலை அடித்து கொன்ற அஞ்சலையை உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

    என்.எல்.சி. ஊழியரை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் பிணத்தை கட்டி எரிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×