search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அவினாசியில் அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

    அவினாசியில் அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஜெய் சக்தி அவென்யூவில் வசித்து வருபவர் ரங்கசாமி (47). நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி கவிதா. இவர் அவினாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் வீட்டின் இரு கதவுகளையும் இரும்பி கம்பியால் நெளித்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    தாங்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டில் உப்பு கரைசலை கொள்ளையர்கள் தெளித்து சென்றுள்ளனர். இன்று காலை கும்பகோணத்தில் இருந்து திரும்பி வந்த ரங்கசாமி மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் வீட்டில் இருந்த நகை கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி அவினாசி விரைந்து வந்தார்.

    அவர் கொள்ளை நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

    போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்து சற்றுதூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொள்ளையர்கள் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அவினாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×