search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை முயற்சி நடைபெற்ற தனியார் வங்கி.
    X
    கொள்ளை முயற்சி நடைபெற்ற தனியார் வங்கி.

    அன்னூரில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி

    அன்னூரில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. லாக்கரை உடைக்க முடியாததால் நகை-பணம் தப்பியது.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் - அவினாசி சாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக சென்னையை சேர்ந்த சுதிந்தர் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை 6 மணிக்கு வேலை முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டி சென்றனர். இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல் வங்கியின் ஜன்னல் கதவு கம்பியை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் லாக்கர் இருக்கும் அறைக்கு சென்ற அக்கும்பல் லாக்கரை உடைக்க முயன்றது. ஆனால் முடியவில்லை.

    இந்த நிலையில் வங்கியின் அலாரம் ஒலிக்க தொடங்கியது. இதனால் பயந்து போன கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இன்று காலை 4 மணியளவில் அந்த வழியாக போலீசார் ரோந்து சென்றனர்.

    வங்கியின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு உள்ளது.


    அப்போதும் வங்கி அலாரம் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வங்கிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததும், லாக்கரை உடைக்க முயன்று இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர் அங்கு விரைந்து வந்தார். அப்போது லாக்கரில் இருந்த நகை - பணம் அப்படியே இருந்தது.

    வங்கி லாக்கரில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நகை, ரூ. 10 லட்சம் பணம் வைக்கப்பட்டு இருந்தது. கொள்ளையர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் இந்த நகை, பணம் தப்பியது.

    சம்பவ இடத்திற்கு கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாஸ்கரன் விரைந்து வந்து பார்வையிட்டார். போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

    வங்கி இருக்கும் அவினாசி ரோடு பகுதியில் ஏராளமான இடங்களில் தனியார் சார்பில் கண்காணிப்பு கேமிரா வைக்கப்பட்டு உள்ளது. அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    வங்கி அருகே உள்ள பழக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதிகாலை 3.15 மணியளவில் வங்கியின் முன்புற விளக்கு எரியும் காட்சி பதிவாகி இருந்தது.

    ஆனால் கொள்ளையர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை. எனவே கொள்ளையர்கள் அதிகாலை 3.15 மணியளவில் தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×