search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சள் பொடி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
    X
    மஞ்சள் பொடி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

    செங்கோட்டை அருகே மஞ்சள் பொடி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து - 4 பேர் படுகாயம்

    நெல்லை மாவட்டம் தென்காசி அருகே மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்து உள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே இலஞ்சி-வல்லம் பிரிவு சிலுவை முக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சள் பொடி தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்திலேயே ஏற்றுமதி பொருட்களை இருப்பு வைக்கும் குடோனும் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு இந்த நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டர் அமல்ராஜ் (வயது 43), அவரது உதவியாளர்கள் மணிகண்டன் (32), கண்ணன் (21) ஆகியோர் பணியாற்றி கொண்டிருந்தனர். மேலும் இரவு காவலாளியாக செண்பகம் (80) என்பவர் இருந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் அந்த நிறுவனத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் செங்கோட்டை, கடையநல்லூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்களும் திரண்டு வந்து உதவினர்.

    ஆனால் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பற்றி எரிந்தது. மஞ்சள் கம்பெனியில் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் எழுந்த கரும்புகை வெகுதூரம் வரை தெரிந்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் செங்கோட்டை, கடையநல்லூர் மற்றும் குற்றாலம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் மஞ்சள் கம்பெனியின் ஊழியர்கள் அமல்ராஜ், மணிகண்டன், கண்ணன், செண்பகம் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தின் வளாகத்திலேயே ஏற்றுமதி குடோனும் செயல்பட்டு வருகிறது. குடோனுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். எனினும் பலமணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

    தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தில் மஞ்சள் கம்பெனியில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×