search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நந்தினியின் தங்கையும், சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா.
    X
    நந்தினியின் தங்கையும், சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா.

    தமிழகத்தில் மதுவுக்கு எதிராக தந்தை - மகள்களின் ஓயாத போராட்டம்

    கோர்ட்டு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையான நந்தினி, ‘டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.
    டாஸ்மாக் மதுக்கடைகளால்  ஏழை மக்களின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட சமூக அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    டாஸ்மாக் பார்கள் பெண்களால் சூறையாடப்பட்ட வரலாறும் உண்டு. மக்கள் திரண்டு நடத்தும் போராட்டங்களுக்கு இடையே தனது தந்தையுடன் ஒரு இளம்பெண் கடந்த 8 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். அவரது பெயர் நந்தினி (வயது 22). மதுரை கே.புதூரைச் சேர்ந்த ஆனந்தன் மகள் தான் நந்தினி. வக்கீலான இவர், மாநிலம் முழுவதும் பல இடங்களுக்கும் சென்று டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பதாகை ஏந்தியும், மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும் போராடி வருகிறார்.

    மதுவுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம், அவரது திருமணத்திற்கே தடையாக அமைந்தது.

    கடந்த 5-ந் தேதி குணா ஜோதிபாசு என்பவரை திருமணம் செய்ய நந்தினி முடிவு செய்திருந்தார். அதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது.

    ஆனால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் அவரது திருமணம் தடைபட்டது.

    இந்த நிலையில் அவரது சகோதரி நிரஞ்சனா 2 நாட்களுக்கு முன்பு தனது தந்தை மற்றும் சகோதரியை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தல்லாகுளம் போலீஸ் நிலையம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலிலும் நந்தினி மதுவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்த உறுதி ஏற்றுள்ளதாக அறிவித்தார்.

    நந்தினி மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடந்த மது எதிர்ப்பு போராட்டத்தில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நந்தினி மற்றும் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக திருப்பத்தூர் கோர்ட்டுக்கு வந்த தந்தை-மகள் மீது கோர்ட்டு அவமதிப்பு புகாரும் கூறப்பட்டது. இந்த புகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவே நந்தினியின் திருமணத்துக்கு தடையாக அமைந்தாலும், இன்னொரு தேதியில் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நந்தினி உறுதிபட தெரிவித்துள்ளார்.

    மதுவிலக்கு மட்டுமல்ல, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு எதிராகவும், பல்வேறு சமூக அவலங்களுக்கு எதிராகவும் நந்தினி தனது தந்தையுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இதற்காக வீட்டு காவலிலும் நந்தினியை போலீசார் 10-க்கும் மேற்பட்ட தடவை வைத்துள்ளனர்.

    பிரதமர், முதல் அமைச்சர் ஆகியோர் வருகையின்போது மதுவுக்கு எதிராக நந்தினி துணிச்சல் மிக்க பெண்ணாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்.

    மதுவுக்கு எதிராக குரல் கொடுத்ததால் ஒரு குடும்பமே கைது நடவடிக்கைக்கு ஆளான சம்பவம் சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் பெரிதாக எதிரொலித்தது. இதனையடுத்து நிரஞ்சனா போலீஸ் எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நந்தினியும், அவரது தந்தை ஆனந்தனும் நேற்று திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கி நீதிபதி அறிவுரை கூறினார்.

    கோர்ட்டு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து நந்தினி மற்றும் ஆனந்தன் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் நிரஞ்சனா மற்றும் உறவினர்கள் இருவரையும் வரவேற்றனர்.

    சிறை வாசலில் நிருபர்களிடம் பேசிய நந்தினி, சிறையில் அடைக்கப்பட்டதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. கோர்ட்டில் நான் கேட்ட கேள்விகள் நியாயமானவை. என்னை மிரட்டுவதற்காக சிறையில் அடைத்தனர். இதனால் போராட்டம் ஓயாது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்றார்.

    சிறையில் அடைக்கப்பட்டதால் திருமணம் தடைபட்டது. இரு தரப்பினரும் கலந்து பேசிய பின்னர் திருமணம் நடக்கும். தீவிர போராட்டத்தின் தொடக்கமாக எனது திருமணம் அமையும். திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து போராடுவோம். சமூக வலைதளங்களின் மூலம் டாஸ்மாக்குக்கு எதிராக போராட்ட ஆதரவு கோருவோம்.

    சிறையில் அடைத்து மிரட்டிப் பார்க்கலாம் என அரசு நினைக்கிறது. எத்தனை தடை வந்தாலும் போராட்டம் தொடரும். படிப்படியான மதுவிலக்கு என்பது அரசின் ஏமாற்று வேலை என்றும் நந்தினி தெரிவித்தார்.

    போராட்டம் குறித்து நந்தினியின் தங்கை நிரஞ்சனா கூறுகையில், எனது தந்தை, சகோதரி மதுக்கடைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மதுக்கடையினால் எண்ணற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று கூறிக் கொண்டு அரசே மதுவை விற்பது பெரும் மோசடி செயலாகும். ஒரு தலைமுறையையே அழிக்கின்ற செயலை அரசே முன்னின்று செய்கிறது. இதனை பொதுமக்கள் இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது.

    மது இல்லாத தமிழகம், போதை இல்லாத இளைஞர்கள் உருவாக வேண்டும். ஏழைகளின் உயிரை குடிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது தான் அவரது முக்கிய கோரிக்கை.

    பொதுமக்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தான் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதனை கண்டு கொள்ளாமல் உள்ளது. மதுக்கடைகளை மூடும் வரை எனது சகோதரி போராடுவாள். அவரது போராட்டத்துக்கு நானும் எப்போதும் துணை நிற்பேன் என்றார்.

    மதுக்கடைக்கு எதிராக எனது மகள் நந்தினி போராட்டம் நடத்தி வருகிறார் அவரது போராட்டத்துக்கு எப்போதும் நான் ஆதரவு தெரிவித்து வருகிறேன். தற்போது போராட்ட களத்தில் எனது இளைய மகளும் கரம் கோர்த்துள்ளார். மதுக்கடைகளை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

    இந்த போராட்டங்களால் போலீசாரின் எச்சரிக்கை, கைது போன்றவை இடையூறு ஏற்படுத்தினாலும், மனம் தளராத வக்கீல் நந்தினி, தனது தந்தை ஆனந்தனுடன் போராட்டத்தை தொடர்ந்தே வருகிறது.

    Next Story
    ×