search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சென்னையை குளிர வைத்த மழை

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் ‘மழை எப்போது பெய்யும்’ என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் உள்ளது.

    கடல் காற்று தாமதமாக நிலத்தை நோக்கி வீசுவதால் வெயில் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

    தென் மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்கிறது. ஆனால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழைக்கான அறிகுறியே காணப்படாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

    சென்னையில் நேற்று மாலை வெப்பச்சலனத்தின் காரணமாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் ஆங்காங்கே மழை தூறல்கள் விழுந்தன. பெரிய மழை பெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தூறலுடன் மழை நின்று விட்டது.

    நள்ளிரவில் மீண்டும் மழை ஆரம்பித்தது. இந்த மழையும் நீண்ட நேரம் பெய்யவில்லை. தரை நனையும் அளவுக்குதான் மழை பொழிந்தது.

    எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, அடையார், தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், மீனப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, மறைமலைநகர் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பொழிவு இருந்தது. ஆனால் கனமழை பெய்யவில்லை. இதனால் மீண்டும் மழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    தென் மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஆங்காங்கே சாரல் மழை கிடைத்து வருகிறது.

    ஆனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மதுரை, கடலூர், கரூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் இயல்பைவிட 4 டிகிரி வரை வெயில் உயர்ந்து காணப்படுகிறது. கிழக்கு கடல் காற்றும் தாமதமாக நிலத்தை நோக்கி வீசுவதால் வெப்பம் அதிகம் நிலவியது.

    இதனால் வெப்பச் சலனம் உருவாகி நேற்றிரவு லேசான மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    தென் மேற்கு பருவ மழை தொடங்கி 1 மாதம் நிறைவடைந்த நிலையில் ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் இதுவரை சராசரியை விட 17 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீதம், புதுச்சேரியில் 79 சதவீதம் பருவமழை குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவையில் நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 30 நிமிடத்துக்கு இந்த மழை நீடித்தது.

    மழையால் அண்ணாசாலை- ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் இருந்த பழமையான மரம் திடீரென பயங்கர சத்தத்துடன் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    Next Story
    ×