search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ் டிரைவர் - கண்டக்டர்
    X
    அரசு பஸ் டிரைவர் - கண்டக்டர்

    தாராபுரம் மாணவிகளை பழனியில் இறக்கி விட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை

    தாராபுரம் மாணவிகளை பழனியில் இறக்கி விட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் சாலையில் மங்கலம் பாளையம் என்ற கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் இருந்து தினமும் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தாராபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். நேற்று மாலை பள்ளியின் சிறப்பு வகுப்புகள் முடிந்த பின் ஆசிரியை கோகிலா, மாணவிகள் நந்தினி, காயத்ரி, கார்த்திகா, கோகிலா ஆகியோர் தாராபுரம் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்தில் ஈரோட்டில் இருந்து பழனி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்கள்.

    இந்த பஸ்சில் டிரைவராக சையது அபுதாகிர், கண்டக்டராக ராம்நாத் ஆகியோர் இருந்தனர். பஸ் மங்கலம் பாளையம் வந்ததும் அதில் பயணம் செய்த ஆசிரியை மற்றும் மாணவிகள் பஸ்சை நிறுத்த வேண்டும் என்றனர்.

    அப்போது பஸ் கண்டக்டர் தகாத வார்த்தைகளால் மாணவிகளை திட்டி நீங்கள் நினைத்த இடத்தில் பஸ் நிற்காது. நாங்கள் சொல்லும் இடத்தில் தான் இறங்க வேண்டும் என கூறியதோடு மங்கலம் பாளையம் பிரிவில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணக்கடவு கிராமத்தில் நிறுத்தினார்.

    பாதிக்கப்பட்ட ஆசிரியை மற்றும் மாணவிகள்

    பஸ் டிரைவர், கண்டக்டரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்த மாணவிகள் தங்களை வழக்கமாக இறக்கி விடும் தங்களது கிராமத்தில் கொண்டு சென்று விடுமாறு வலியுறுத்தினார்கள். அப்போது அவர்களை கண்டக்டர் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை தட்டி கேட்ட மாணவிகளை மேலும் 20 கி. மீ. தொலைவில் உள்ள பழனி பஸ் நிலையத்தில் இறக்கி விட்டார்.

    இந்த நிலையில் வழக்கமாக இரவு 7 மணிக்கு வீடு திரும்பி விடும் மாணவிகளை அழைத்து செல்வதற்காக அவர்களது பெற்றோர் மங்கலம் பாளையம் பிரிவில் காத்து இருந்தனர். தங்களது குழந்தைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாணவிகள் கடத்தப்பட்டார்களா? என்ற பரபரப்பும் நிலவியது. இந்த நிலையில் 5 மாணவிகளும் பழனியில் தவித்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

    மேலும் பஸ் டிரைவர், கண்டக்டரின் அலைக்கழிப்பால் அவர்கள் அங்கு இறக்கி விடப்பட்டதும் தெரிய வந்தது. இதனால் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். பெற்றோர் மற்றும் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் தாராபுரம்- பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தாராபுரத்தில் இருந்து பழனி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மங்கலம் பாளையம் பிரிவில் நின்று பயணிகளை இறக்கி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் இருந்து ஏற்கனவே உத்தரவை பெற்று அதனை அறிவிப்பு பலகையாக வைத்து உள்ளனர். ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது கிராம மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த சாலை மறியலால் பழனியில் இருந்து தாராபுரம், கோவை, ஈரோடு, திருப்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் தாராபுரம் அரசு போக்குவரத்து கழக மேலாளர் குணசேகரன்,டி.எஸ்.பி. ஜெயராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அதே பஸ்சில் அழைத்து வந்துவிட வேண்டும் என கூறினார்கள். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போக்குவரத்து மேலாளர், டி.எஸ்.பி. ஆகியோர் மாணவிகளை அதே பஸ்சில் அழைத்து வந்து விடுகிறோம். நீங்கள் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது எந்த தாக்குதலும் நடத்த கூடாது என்றனர். அதற்கு பொதுமக்களும் ஒத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து மாணவிகளை மங்கலம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் எந்த பஸ் இறக்காமல் சென்றதோ அதே பஸ்சில் பழனியில் இருந்து மாணவிகள் அழைத்து வரப்பட்டனர்.

    அவர்கள் மங்கலம் பாளையம் பிரிவில் இறக்கிவிட்ட பின் பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். 2 மணி நேரம் தாமதத்திற்கு பின் மாணவிகள் வீடு திரும்பினார்.

    மாணவிகளை மங்கலம் பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறக்காமல் விட்டு சென்ற அரசு பஸ் தாராபுரம் டெப்போவை சேர்ந்தது. அதன் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கையை டிவி‌ஷனல் மேலாளர் எடுக்க உள்ளார்.

    Next Story
    ×