search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவியை குண்டுக்கட்டாக போலீசார் வெளியேற்றிய காட்சி.
    X
    நிர்மலாதேவியை குண்டுக்கட்டாக போலீசார் வெளியேற்றிய காட்சி.

    பள்ளிவாசலுக்குள் திடீரென நுழைந்த நிர்மலாதேவி - குண்டுக்கட்டாக வெளியேற்றம்

    பேராசிரியை நிர்மலாதேவி அருப்புக்கோட்டையில் பள்ளிவாசலுக்குள் திடீரென நுழைந்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று நேரில் ஆஜரானார். அங்கு கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியேற மறுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    காமாட்சி அம்மன் பேசுவதாகக் கூறி பல்வேறு தகவல்களை கூறினார். போலீஸ் கைது செய்ய வருவதாக அருகில் இருந்தவர்கள் கூறியதன் பேரில் அங்கிருந்து கிளம்பினார். இந்த நிலையில் நேற்று மாலை தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு வந்த அவர் அங்கும் பள்ளி வாசலுக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதுபற்றிய விவரம் வருமாறு:-

    பேராசிரியை நிர்மலாதேவியின் வீடு அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியநகரில் உள்ளது. நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்த நிர்மலாதேவி தனது வீட்டுக்கு செல்லவில்லை. அருப்புக்கோட்டை பஜாருக்கு வந்து பொருட்கள் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்குள் தலைவிரி கோலத்துடன் திடீரென நுழைந்தார். தம்மை நபிகள் நாயகம் இங்கு அமர சொன்னதாக வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார். இதனைக்கண்டதும் ஜமாத் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

    நிர்மலாதேவியை அங்கிருந்து வெளியே போகச்சொன்னார்கள். ஆனால் யார் கூறியதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தரையில் படுத்து உருளத்தொடங்கினார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் அங்கு வந்த மகளிர் போலீசார் நிர்மலாதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் வெளியே போக மறுத்து அவர் முரண்டுபிடித்தார். சுமார் 2 மணி நேரம் அனைவரையும் படாதபாடு படுத்திய நிலையில் போலீசார் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

    பின்னர் வாகனத்தில் ஏற்றி அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். அங்கும் வீட்டுக்குள் செல்ல மறுத்து நிர்மலாதேவி அடம் பிடித்தார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக அவரை வீட்டுக்குள்ளே அனுப்பி வைத்தனர். நிர்மலாதேவியின் நேற்றைய நடவடிக்கைகள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

    Next Story
    ×