search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.
    X
    திருச்சி விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

    நீட் தேர்வு மசோதா நிராகரிப்பு, தமிழக அரசின் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது- வைகோ பேட்டி

    தமிழக அரசின் நீட்தேர்வு மசோதாவை நிராகரித்து விட்டோம் என்று மத்திய அரசு வக்கீல் தெரிவித்துள்ளது தமிழக அரசின் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளதன் மூலம் மாநில அ.தி.மு.க. அரசு ஏமாற்றி வந்துள்ளது நன்றாக தெரிகிறது. அல்லது மத்திய அரசு தமிழக அரசை நம்ப வைத்து கழுத்தறுத்து உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    நீட் தேர்வால் தமிழகத்தில் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதிலும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் தங்களது மருத்துவ கனவு நனவாகாதோ? என்று எண்ணி உயிரை மாய்த்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே தமிழகம் தனித்துவம் வாய்ந்தது. சமூக நீதியின் அறனும், அடித்தளமும், தொட்டிலும் ஆகும். இந்த உணர்வுகளை புரிந்திருந்தாலும் கூட திட்டமிட்டே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு நய வஞ்சக செயலை மத்திய அரசு செய்துள்ளது. இது மத்திய அரசு தமிழக மக்களுக்கு ஏற்படுத்திய அநீதிகளில் முக்கியமான அநீதியாகும்.

    உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் நீட்தேர்வு மசோதாவை நிராகரித்து விட்டோம் என்று மத்திய அரசு வக்கீல் தெரிவித்துள்ளது தமிழக அரசின் கன்னத்தில் அறைந்தது போல் உள்ளது.

    சமூக ஆர்வலர் முகிலன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராளி. மாயமான அவரது உயிருக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்குமோ? என்று மிகவும் பயந்தேன். தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கர்நாடகாவில் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. வேறு பல காரணங்களும் இருக்கலாம். அங்கு ஆட்சி நீடிக்குமா? என்பது கேள்விக்குறி தான்.

    மேல்சபை தேர்தலில் போட்டியிட உள்ள எனது வேட்பு மனுதாக்கல் ஏற்கப்படுமா? என்பது வருகிற 9-ந்தேதிதான் தெரியும். அது வரை தோழர்கள் அமைதியாக பொறுமையாக இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கும். அது நிதி மந்திரிக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×