search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி

    கவர்னர் கிரண்பேடி தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் நாராயணசாமி வெளிநடப்பு

    கவர்னர் கிரண்பேடி தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் இருந்து முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறும்.

    கடந்த சில ஆண்டாக ஜூன், ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் மார்ச் மாதம் 5 மாத அரசு செலவினங்களுக்கு மட்டும் சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    இதனால் இம்மாத இறுதியில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தங்கள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள், தாழ்த்தப்பட்டோர் என தனித்தனியாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி சந்தித்து பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    நாளை மறுநாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தவும் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் பட்ஜெட் தொடர்பான மாநில திட்டக்குழு கூட்டம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த கூட்டத்தில் வழக்கமாக எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு சட்டமன்ற கட்சி தலைவர்கள் அழைக்கப்படவில்லை. இதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு திட்டக்குழு கூட்டம் தொடங்கியது. கவர்னர் கிரண்பேடி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், வைத்திலிங்கம் எம்.பி., அரசு துறை செயலர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    கூட்டம் தொடங்கிய 10 நிமிடம் கழித்து அ.தி.மு.க. எம்.பி. கோகுலகிருஷ்ணன் கூட்டத்திற்கு வந்தார்.

    அவர் வந்தவுடன் இந்த கூட்டத்திற்கு வழக்கமாக எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற கட்சித்தலைவர்களை அழைப்பர். ஆனால், இந்த கூட்டத்திற்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை? இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.

    எனவே, அவர்களையும் அழைத்து கூட்டத்தை நடத்த வேண்டும்.

    எனவே, இந்த கூட்டத்தை நான் புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார். இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. பேசும்போது, இந்த கூட்டத்திற்கு எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற கட்சி தலைவர்களை அழைத்து இருக்க வேண்டும்.

    அவர்களை அழைக்காததற்கு யார் பொறுப்பேற்பது? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, கூட்டத்துக்கு யார், யாரை அழைக்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடிக்கு கடிதம் அனுப்பினேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனக்கூறி அந்த கடிதத்தின் நகலை காண்பித்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்தை அவர்களை அழைத்துத்தான் நடத்த வேண்டும். அதுதான் முறையாக இருக்கும். அவர்களுக்கு சட்டமன்றத்தில் நான்தான் பதில்கூற வேண்டும். அதிகாரிகள் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை அழைத்த பின் கூட்டத்தை நடத்தலாம் எனக்கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும், எம்.பி. வைத்திலிங்கமும் வெளியேறினர். இதனால் கூட்டம் தொடங்கிய அரைமணி நேரத்திற்குள் கூட்டம் முடிந்தது.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திட்டக்குழுவுக்கு துணைத்தலைவராக நான் உள்ளேன். கடந்த ஆண்டு திட்டக்குழு கூட்டத்திற்கு சட்டமன்ற கட்சித்தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.

    அதேபோல இந்த ஆண்டு திட்டக்குழு கூட்டத்திற்கு யார், யாரை அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கோப்பு அனுப்பினேன். ஆனால், கவர்னர் கோப்புக்கு பதில் கூறவில்லை. இதனால்தான் யாரை அழைப்பது என முடிவு செய்ய முடியவில்லை.

    சட்டமன்றத்தில் நான்தான் பதிலளிக்க வேண்டும். இந்த கூட்டம் தொடங்கிய பிறகும் சட்டமன்ற கட்சித்தலைவர்களை அழைப்பது தொடர்பாக கேட்டேன். ஆனால் கவர்னர் கிரண்பேடி கூட்டம் நடத்துவதில்தான் குறியாக இருந்தார். இதனால் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×