search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைக்க வேண்டும் - ராமதாஸ்

    2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்று 1976-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவுக்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது இந்தியாவின் மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வந்தது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் அது மக்கள்தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் என்பதால் தான் தொகுதிகளை அதிகரிக்க தடை விதிக்கப்பட்டது.

    ஆனால், இன்று நாட்டில் மக்கள்தொகைப் பெருக்கம் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. மக்களிடமும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தடையை மேலும் நீட்டிக்காமல், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி புதிய தொகுதிகளை உருவாக்குவதே சரியாக இருக்கும்.

    தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்த பிரணாப் முகர்ஜியே 08.04.2017 அன்று தில்லியில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறினார். அவரது கருத்துக்கு செயல்வடிவம் தர வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடும் ஆகும்.

    இந்தியா கடைபிடிக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை உருவாக்கிக் கொடுத்த இங்கிலாந்தில் இன்னும் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 13 தேர்தல்களில் 25 தொகுதிகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன.

    இங்கிலாந்தில் ஒரு மக்களவைத் தொகுதியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை 70,997 மட்டும் தான். ஆனால், இந்தியாவில் மக்களவை தொகுதியின் சராசரி வாக்காளர் எண்ணிக்கை 16.57 லட்சம் ஆகும். இது இங்கிலாந்தை விட 20 மடங்கு அதிகம் ஆகும்.

    இங்கிலாந்தில் ஒரு தொகுதியின் அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கை 90 ஆயிரம் மட்டும் தான். ஆனால், இந்தியாவில் அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கை 31.83 லட்சம் ஆகும். இது இங்கிலாந்தை விட 35 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளை வைத்துக் கொண்டு அவர்களின் குறைகளை தீர்ப்பது சாத்தியமற்றதாகும்.

    எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சம் பேருக்கும், மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 12 லட்சம் வாக்காளர்களுக்கும் மிகாமல் இருப்பதை தொகுதி மறுவரையறை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×