search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கிய போது எடுத்த படம்.
    X
    மருத்துவ அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கிய போது எடுத்த படம்.

    மருத்துவ அலுவலர்கள் 584 பேருக்கு நியமன ஆணை- முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

    சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
    சென்னை:

    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இன்றைக்கு இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நாம் தொடர்ந்து 3 ஆண்டு காலமாக முதலிடம் வகிக்கிறோம். பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்திருக்கிறோம். பிரசவ காலத்தில் தாய்மார்களின் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருக்கின்றது. இதெல்லாம் நம் மருத்துவர்கள் செய்த சாதனை.

    அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் மூலம் 14 வகையான பொருட்கள் கொடுத்து, பிறக்கின்ற குழந்தைகள் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்பதற்காக தாய் உள்ளத்தோடு இந்தத் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

    அதேபோல, மகப்பேறு காலத்தில் மகளிரின் ஆரோக்கியத்திற்காக 11 வகையான சித்த மருத்துவ மூலிகை அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் என்ற திட்டத்தையும் அம்மா கொடுத்தார்.

    கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் ஆகவும், ரூ.12ஆயிரத்தில் இருந்து 18ஆயிரம் ரூபாயாக உயர்த்தினார். இந்தத் திட்டத்தில் 56 லட்சத்து 28 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 5300 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக 36 லட்சத்து 60 ஆயிரம் பயனாளிகள் 6046 கோடி ரூபாய் அளவில் உயரிய சிகிச்சை பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இன்றைக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிருக்கான அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம், விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், நடமாடும் மருத்துவமனை திட்டம், தொற்றுநோய் தடுப்பு கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கும் திட்டம், தாய்ப்பால் வங்கித் திட்டம், விபத்து சேவை மையம் முதலிய உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவுதல், 104 தகவல் ஆலோசனை மற்றும் புகார் உதவி, போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டு, இன்றைக்கு தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×