search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

    சேலம் உருக்காலை தொழிலாளர்கள் இன்று ஸ்டிரைக்- உற்பத்தி பாதிப்பு

    தனியார் மயமாக்குதலை கண்டித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை கடந்த 1981-ம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்டது.

    இந்த ஆலைக்காக 3 ஆயிரம் விவசாயிகள் தங்களின் நிலத்தை வழங்கினர். சேலத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்புதாதுக்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இரும்பாலையில் உருட்டாலை மட்டும் முதலில் செயல்பாட்டுக்கு வந்தது. பிறகு விரிவாக்கத்தின் போது உருக்காலையாக மாற்றம் பெற்றது. இதன்மூலம் தற்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன்சீட் ஸ்டீல் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம் உருக்காலையில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை பார்த்து வருகின்றனர். 3 ஆயிரம் பேர், மறைமுக வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த உருக்காலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் பொதுத்துறையின் செயில் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்) நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் உருக்காலை, மேற்கு வங்கத்தில் உள்ள அலாய் இரும்பாலை, கர்நாடக மாநிலம் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பாலை ஆகிய 3 உருக்காலைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

    ஏற்கனவே சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரம், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தனியார் மயமாக்கும் முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்காமல் இருந்து வருகிறது.

    3 இரும்பாலைகளையும் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் உருக்காலை தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    சேலம் இரும்பாலை தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று மாலை, அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இதில், ஐஎன்டியூசி, பாட்டாளி தொழிற்சங்கம், அண்ணா தொழிற்சங்கம், நிலம் கொடுத்தோர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், இரும்பாலை தனியார் மயத்தை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். மேலும் இன்று (5ந் தேதி) ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவது என்றும் அடுத்த கட்ட போராட்டம் பற்றி இன்று மாலை முடிவு செய்வது என்றும் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    அதன்படி இன்று காலை உருக்காலை தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வேலைக்குச் செல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அவர்கள் இரும்பாலை 5-வதுகேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் தனியார் மயமாக்குதலை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது சில தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முயன்றனர் அவர்களை போராட்டம் நடத்தியவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம் இரும்பாலை உள்பட 3 ஆலைகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் இந்த முடிவு தொழிலாளர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×