search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 43 அடியாக சரிவு - மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 43 அடியாக சரிந்தது. குறுவை சாகுபடி செய்யாவிட்டாலும் சம்பா சாகுபடியாவது செய்ய முடியுமா? என்று டெல்டா விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது.

    கேரளா மற்றும் கர்நாடகாவில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும். அந்த தண்ணீர் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு வந்து அந்த அணைகள் நிரம்பியதும் உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும்.

    அந்த தண்ணீர் ஒகேனக்கலை கடந்து மேட்டூர் அணைக்கு வரும்போது அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டும் பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும். வழக்கமாக ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 6-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும்.

    ஆனால் போதுமான நீர் இருப்பும், நீர் வரத்தும் இல்லாததால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை வழக்கமான நாளான ஜூன் 12-ந் தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 8-வது ஆண்டாக இந்தாண்டும் குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது. இந்த மழை கர்நாடகாவில் தென் மாவட்டங்களான மாண்டியா, மைசூரு, குடகு உள்பட பல மாவட்டங்களில் பெய்தது. இதனால் தொடர் மழை பெய்து கர்நாடக அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் 2 நாட்கள் பெய்த மழை திடீரென பின் வாங்கியது.

    தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இனி வரும் நாட்களில் மழை தீவிரம் அடைந்தாலும் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு இந்த மாதம் தண்ணீர் வந்து சேர வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஆண்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. ஆனால் இந்தாண்டு தற்போது நீர்வரத்து மிக குறைவாக உள்ளாதால் கடந்த ஆண்டை விட தண்ணீர் திறப்பு மேலும் தாமதமாகவே வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 43.16 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 213 அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    இதனால் இனி வரும் நாட்களில் வருண பகவான் கை கொடுப்பாரா? குறுவை சாகுபடி செய்யாவிட்டாலும் சம்பா சாகுபடியாவது செய்ய முடியுமா? என்ற பரிதவிப்பில் டெல்டா விவசாயிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.



    Next Story
    ×