search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் தாய்மாமன் கைது
    X

    கோவையில் 2½ வயது சிறுமி கொலையில் தாய்மாமன் கைது

    கோவையில் 2½ வயது பெண் குழந்தை கொலையில் தாய்மாமனை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரிய கவுண்டனூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி காஞ்சனா (21). இவர்களுக்கு அரும்பதா என்ற (2½) வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் சரவணம்பட்டி அருகே உள்ள விளாங்குறிச்சியில் குப்புராஜ் தோட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகராஜ் அன்னூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். வீட்டில் தனியாக இருந்த காஞ்சனா, குழந்தையுடன் பழனியப்பன் கவுண்டர் தோட்டத்தில் வசித்து வரும் தனது தாய் பேச்சியம்மாள் வீட்டிற்கு சென்றார். அங்கு காஞ்சனாவின் தாய் பேச்சியம்மாள், தந்தை குப்புசாமி, தங்கை மகன் பூபதி (26), குப்புசாமியின் முதல் மனைவியின் மகள் கற்பக விஷ்ணு (28), மகன் ரகுநாதன் (26) ஆகியோர் இருந்தனர்.

    இரவில் காஞ்சனா குழந்தையுடன் தூங்க சென்றார். அதிகாலை 3 மணியளவில் அருகே படுத்து இருந்த குழந்தையை காணவில்லை. இதனையடுத்து அவர் உறவினர்கள் உதவியுடன் அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது வீட்டின் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அரும்பதா இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த அன்று இரவு வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் குழந்தையின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் குழந்தையின் நுரையீரலில் தண்ணீர் இருந்தது தெரிய வந்தது. எனவே குழந்தை அரும்பதாவை யாரோ உயிருடன் கிணற்றில் வீசி கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வீட்டில் இருந்த உறவினர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை அரும்பதாவை தான் கொலை செய்ததாக தாய்மாமன் ரகுநாதன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில கூறியதாவது:-

    நான் பால் வியாபாரம் செய்து வருகிறேன். சம்பவத்தன்று இரவு நான் வீட்டின் அருகே உள்ள பாழடைந்த கிணறு அருகே சென்று மது அருந்தினேன். போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது வீட்டில் காஞ்சனா குழந்தையுடன் இருந்தார். குழந்தை அரும்பதாவை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இரவு அனைவரும் தூங்க சென்றனர்.

    நான் வெளியே படுத்து இருந்தேன். அதிகாலை 3 மணியளவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். இது தான் சமயம் என நினைத்து படுக்கையில் இருந்து அரும்பதாவை தூக்கி கொண்டு பாலியல் பலாத்காரம் செய்வதற்காக வெளியே வந்தேன்.

    திடீரென குழந்தை அம்மா... அம்மா... என அழத் தொடங்கியது. எனவே சத்தம் கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தினேன். சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் போனது. எனவே குழந்தை இறந்து விட்டதாக நினைத்து பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல வந்து படுத்துக்கொண்டேன். குழந்தையை காணவில்லை என்று காஞ்சனா தேடியபோது நானும் சந்தேகம் வராமல் இருக்க உடன் சேர்ந்து தேடினேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.

    கோவை விளாங்குறிச்சியில் உள்ள பாழடைந்த கிணற்றில் அரும்பதா (2½) என்ற சிறுமி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் பத்திரிகையாளர்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று வீட்டில் உள்ள குழந்தையின் உறவினர்களிடம் சாவுக்கான காரணம் குறித்து பேட்டி எடுத்தனர். அப்போது குழந்தையின் தாய்மாமன் ரகுநாதன் என்பவர் சோகத்துடன் எனது தங்கைக்கும், மச்சானுக்கும் எந்த விரோதிகளும் இல்லை. இரவு நாங்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி விட்டோம். குழந்தையை யார் கொலை செய்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது என பேட்டி அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி கொலைக்கு காரணம் ரகுநாதன் தான் என தற்போது தெரிய வந்துள்ளது. குழந்தையையும் கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல பேட்டியும் அளித்தது கைது செய்யப்பட்ட பின்னர் தான் தெரிய வந்தது.

    Next Story
    ×