search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டரை மிரட்டியதாக வழக்கு: கரூர் கோர்ட்டில் ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆஜர்
    X

    கலெக்டரை மிரட்டியதாக வழக்கு: கரூர் கோர்ட்டில் ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆஜர்

    கலெக்டர் அன்பழகனை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.
    கரூர்:

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்று எம்.பி.யாக பதவியேற்றுள்ளார்.

    இதேபோல் கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலின்போது கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக செந்தில்பாலாஜி மற்றும் ஜோதி மணி ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதனிடையே பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய தி.மு.க., அ.தி.மு.க. ஒரே நேரத்தில் அனுமதி கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

    தி.முக.வினர் நாங்கள்தான் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம் என்பதால் எங்களுக்கே முதலில் அனுமதி வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கரூர் கலெக்டர் அன்பழகன், தான் தோன்றிமலை போலீசில் புகார் செய்தார். அதில் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஜோதிமணி, செந்தில் பாலாஜி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தி.மு.க. வக்கீல் செந்தில் மற்றும் 100 பேர் எனது வீட்டிற்கு நள்ளிரவில் வந்து கதவை தட்டி, அச்சுறுத்தியதாக புகார் செய்தார்.

    அதன் பேரில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க இருவரும் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி, அதற்கான ஆணையை கரூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி பெற்றுக்கொள்ளும்படி உத்தரவிட்டது.

    இதையடுத்து செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி. ஆகியோர் இன்று காலை கரூர் முதலாவது ஜூடிசியல் கோர்ட்டில் ஆஜராகி, முன்ஜாமீன் ஆணையை பெற்றுக்கொண்டனர்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கரூர் கலெக்டர் அன்பழகன் நடுநிலையாக செயல்படாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, சாதகமாக செயல்பட்டார். பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி பெறுவதற்காக சென்ற எங்கள் மீது பொய்யான புகார் கொடுத்தார். ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில் அவர் புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் என்னை 100 பேர் வந்து மிரட்டியதாகவும், அதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளதாகவும் கூறினார். எனவே நிருபர்கள் அவரை சந்திக்கும் போது எப்போது வீடியோ பதிவை வெளியிடுவீர்கள்? என்று கேட்க வேண்டும் என்றார்.

    தேர்தலின்போது கரூர் கலெக்டருடன் மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க அழைக்காதது தொடர்பாக ஜோதிமணி எம்.பி., செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் கலெக்டர் மீது புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×